பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தொல்லை கொடுக்கும் இருமல் நோய் கக்குவான். உண்ட உணவை இருமிஇருமிக் கக்கி வெயியேற்றுவதால் இதற்குக் கக்குவான் இருமல் என்று பெயர் வந்தது.
பெர்டுஸில் என்ற கிருமியினால் இந்த நோய் உண்டாகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இது ஒரு தொற்று நோய். குழந்தைகள் மத்தியில் மிக வேகமாகப் பரவித் தொல்லை தருவதால் இருமல் வந்த குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் பெற்றோர் பாதுகாக்க வேண்டும். இந்த நோய் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்கினால், இசிவை உண்டாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
இந்த நோய் வந்த குழந்தைகளுக்கு தொந்தரவுகளும் உண்டாகலாம். தொடர்ந்து இருமுவதால் சுவாசப் பைகளிலுள்ள சிறு காற்றுக் குழாய்கள் விரிவடைகின்றன. இதனால் பிராங்கியக்டஸிஸ் என்ற சுவாசக் கோளாறு நோயும் உண்டாகிறது.
ஆகாரத்தை இருமியபடி வாந்தி எடுப்பதால் குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுத் துரும்பாய் இளைத்து விடுகிறார்கள். பகலைவிட இரவில் இருமல் அதிகமாவதால் குழந்தைகளின் தூக்கம் கெடுவதோடு, குடும்பத்திலுள்ள அனைவரின் தூக்கமும் கெட்டு எல்லோருமே துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.
இதையும் படிக்க : சிறுநீர் கழிக்கும் போது சிரமமாக இருக்கிறதா ? எப்படி தடுப்பது ?
இந்த நோய் சில குழந்தைகளுக்கு மூன்று மாதங்கள் கூட தொடர்ந்து தொல்லை கொடுக்கும். இந்த நோயை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் பிறகு நிமோனியா காய்ச்சல் கூடவரும்.
டிப்தீரியா, டெட்னஸ், ஊஃபிங் காஃப் (Whooping Cough) ஆகிய மூன்று நோய்களும் வராமல் தடுக்கக் குழந்தைப் பருவத்திலிருந்தே டிரிபிள் ஆன்டிஜன் ஊசி போட்டுக் கொண்டால் கக்குவான் இருமலைத் தடுத்து நிறுத்தலாம்.
மாதம் ஒரு ஊசி வீதம் மூன்று மாதங்கள் அடுத்தடுத்து போட்டு வந்தால் இந்த நோய் வராது.
ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்றாவது மாதம், நான்காவது மாதம், ஐந்தாவது மாதங்களில் போடலாம். இப்படிப் போட்டு வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்க்கும் சக்தி வந்துவிடுகிறது.
கக்குவான் இருமல் வந்த குழந்தைகளுடன் விளையாடும் மற்ற குழந்தைகளுக்கும் சீரம் ஊசி போட்டுக் கொள்வதால் நோய் தொற்றாமல் தடுத்துக் கொள்ளலாம்.
தமிழ் வைத்தியத்தில் தூதுவளைச் சாற்றில், கோஷ்டம் என்ற நாட்டு மருந்து சரக்கைக் குழப்பி அதோடு பசு நெய்யையும் கலந்து கொடுக்கிறார்கள். இது கக்குவான் நோயைக் குணப்படுத்தகிறது. இது தவிர பலாச் சுளையைத் தேனில் நனைத்துக் கொடுக்கிறார்கள். எளிமையான வைத்தியம்.
இப்போது பெரும்பாலான குழந்தை நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்பத்திலேயே போட்டுக்கொள்ள வசதிகள் இருக்கின்றன. இதனால் கக்குவான் நோய் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.
Comments
Post a Comment