நாம் வாழ்க்கையில் கொரில்லா போன்ற தோற்ற முடைய சிலரைப் பார்க்கிறோம்.
கரடி போல் ரோமம் நிறைந்த சில உருவங்கள்.
பனைமரம் போல் உயரமாக வளர்ந்த மனிதர்கள்.
வளர்ச்சி இல்லாத உருவங்கள். கரிய நிறம். சிவந்த நிறம் கொண்ட ஆண் பெண் உருவங்கள்.
ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்ற இரண்டுங்கெட்ட மனிதர்கள்.
மார்பு வளர்ச்சி இல்லாத பெண்கள். பெண் போல் மார்பு வளர்ச்சி பெற்ற ஆண்கள்.
மீசை உள்ள பெண்கள். முடியில்லாத புருவங்கள். எப்போதும் கை கால்களில் வியர்வை கொட்டும் மனிதர்கள்.
ஆண்மை இல்லாத ஆண்கள். பெண்மை இல்லாத பெண்கள்.
விழி பிதுங்கிய ஆந்தை மனிதர்கள். இன்னும் எத்தனை எத்தனையோ வித உடல்நலம், மன நலம் சரியில்லாத ஆண் பெண்களையெல்லாம் வாழ்க்கையில் சந்திக்கிறோம்.
இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோளாறுகளுக்கு ஒரு பின்னணி இருக்கிறது என்பதை மட்டும் அறிவோம். ஆனால் விரிவாகத் தெரிவதில்லை.
இவற்றை ஹார்மோன் கோளாறுகள் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
Hormones என்றால் என்ன?
நம் உடலில் சுரக்கும் சில நீர்களில் இரசாயனக் கூட்டுப் பொருள்கள் சேர்ந்திருக்கின்றன. இவை உடலில் பல பாகங்களில் உற்பத்தியாகி இரத்தத்துடன் கலந்து சில உறுப்புக்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
இவற்றைத் தமிழில் காப்பு நீர்கள் என்று கூறுகிறார்கள். உடலின் வளர்ச்சிக்கு இந்தக் காப்பு நீர்கள் மிகவும் பயன்தருகின்றன.
இந்தச் சுரப்பு நீர்கள் தேவையான அளவு சுரந்தால் உடலுக்கு நன்மை உண்டு. இதனால்தான் இந்த நீரைக் காப்பு நீர் என்று சொல்லுகிறார்கள்.
தேவைக்கு அதிகமாகச் சுரந்தாலும் கேடு உண்டாகிறது. குறைவாகச் சுரந்தாலும் தீமை உண்டாகிறது. சுரக்க வேண்டிய உறுப்பில் சுரக்காமல் போனாலும் விபரீதங்கள் உண்டாகின்றன.
ஊக்கியங்கள் என்று அழைக்கப்படும் ஹார்மோன்கள், சுரக்கும் இடத்திற்கு அருகிலும் சில விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
சுரக்கும் இடம் வெவ்வேறாக இருந்தாலும் இந்தச் சுரப்பு நீர்கள் உடலின் பல பாகங்களுக்கும் சென்று அங்கங்கே சில கிளர்ச்சிகளைத் தூண்டிவிட்டுப் பல வேடிக்கைகளைச் செய்து சில விபரீதங்களையும் தோற்று விக்கின்றன.
மனித வாழ்க்கையில் சில பண்புகளைப் பாதித்துக் கோபம், ஆத்திரம், பரபரப்பு, பைத்தியம் என்று பல கோணல்களை இந்த ஹார்மோன்கள் உண்டாக்கி விடுகின்றன.
நம் உடலில் சுரக்கும் சுரப்பு நீர்கள் பல என்றாலும், நாளமில்லாத சுரப்பிகள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.
இவை வெகு விரைவில் இரத்தத்துடன் கலந்துவிடுவதால் பல நன்மைகளும், சில தீமைகளும் ஏற்படுகின்றன.
நாலமில்லாச் சுரப்பிகளை ஏழு வகையாகப் பிரித்திருக்கிறார்கள்.
1) கணையச் சுரப்பிகள்,
2) பிட்யூட்டரி சுரப்பிகள்
3) தைராய்டு சுரப்பிகள்,
4) பேராதைராய்டு சுரப்பிகள்,
5) அட்ரினல் சுரப்பிகள்,
6) சூல் பை,
7) விந்துச் சுரப்பிகள்
என்று ஏழு பிரிவுகளாகத் தொகுத்து அதனால் ஏற்படும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.
இவை முழுவதையும் விளக்கமாக எழுத நினைத்தால் பல பக்கங்கள் ஓடிவிடும்.
எனவே ஹார்மோன்களால் ஏற்படும் சில கோளாறு களை மட்டும் இங்கு சுருக்கமாகச் சொல்லுகிறேன். பாங்கிரியாஸ் என்று சொல்லப்படும் கணையநீர் சுரப்பி இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த நீர் குறைந்தால் டயாபடீஸ் என்று சொல்லப்படும் நீரிழிவு நோய் உண்டாகிறது.
பிட்யூட்டரி சுரப்பி;
இது எல்லாச் சுரப்பிகளிலும் தலைமையான சுரப்பி. பிட்யூட்டரின் என்ற நீரைச் சுரக்கிறது. பருவம் வருமுன் இது அதிகமாகச் சுரந்தால் இராட்சச வளர்ச்சி ஏற்படுகிறது. எலும்புகள் நீளமாக வளரும். மிக உயரமான வளர்ச்சியை உண்டுபண்ணும்.
குறைவாகச் சுரந்தால் குள்ளமான உருவம் அமைந்து விடும். இந்த வளர்ச்சிக் கோடுகள் பிட்யூட்டரி சுரப்பியால் ஏற்படுகின்றன என்று சொன்னால் வியப்பாக இருக்கிறது அல்லவா?
தைராய்டு சுரப்பி:
இந்த சுரப்பியால் உண்டாவது தைராக்ஸின். இந்த நீர் போதுமான அளவு சுரக்கா விட்டால் கழுத்தில் கழலை, கண்டமாலை, உடலில் வீக்கம், மந்த புத்தி, மன வளர்ச்சிக் குறைவு ஆகியவை உண்டாகின்றன.
பார தைராய்டு சுரப்பி:
இந்தச் சுரப்பு நீர் குறைவாகச் சுரப்பதால் தசைகளில் வலிப்பு, இழுப்பு நோய், கைகள் மடங்கி, விரல்கள் வளையும் நிலை ஏற்படுகிறது. பேரா ஹார்மோன் அதிகம் சுரப்பதால் மனக் கோளாறுகள் உருவாகும்.
பிட்யூட்டரி அதிகமாகச் சுரந்தால் எலும்புகள் நீண்டு போகும். கைகால்கள் பெருத்துவிடும். மூக்கு, உதடு, தலைப் பகுதிகள் பெருத்துக் குரங்குபோல் காட்சி தரும்.
உடம்பில், கை, கால் பகுதியில் வியர்வை அதிகமாகிச் சலவை உடம்பு என்று சொல்லும் வியர்வை நோயை உண்டாக்கும்.
ஆண்களுக்கு உடம்பெல்லாம் அதிக முடி முளைக்கும். பெண்களுக்கு மீசை அரும்பும். ஆண்களுக்கு ஆண்மைக் குறைவும், பெண்களுக்கும் மலடும் உண்டாகும்.
ஆண் பெண்ணாகவும், பெண் ஆணாகவும் மாறும் நிலை உண்டாகும்.
அட்ரினல் சுரப்பிகள்:
இந்த நீர்க் குறைவால் தோலில் நிறமாற்றம் உண்டாகும். பசியின்மை, தசைகளில் பலவீனம், உடல் அசதி உண்டாகும். இரத்த சோகை உண்டாகும். சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.
பெண்களுக்கு மீசை, புருவம் அடர்த்தியாக வளரும். ஆண்களுக்கு உடம்பெல்லாம் முடி வளரும். இரத்த அழுத்தம் அதிகமாகும். இரத்தக் குழாய் சுருங்கும். அட்ரினலின்சுரப்பு நீர்குறைந்தால் பயம், அச்சம் அதிகமாகி, சம்பந்தப்பட்டவர்களை படுகோழையாக ஆக்கிவிடும்.
ஹார்மோன் குறைபாடுகளைக் கண்டுபிடித்து எந்தச் சுரப்பி தீமை செய்கிறதோ அதை ஆப்ரேஷன்மூலம் நீக்குகிறார்கள்.
ஊசி, மருந்துகள் மூலம் கட்டுப்பாடுக்குள் கொண்டு வருகிறார்கள். இதனால் நோய்கள் குணமாகின்றன.
குணங்களையும் மாற்றி அமைக்கலாம் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள். ஆகவே சுரப்பிகளில் ஏற்படும் கோளாறுகளைக் கண்டுபிடித்து சிகிச்சை அளித்தால் ஆரோக்கிய வாழ்வுக்கு வழி பிறக்கும்!
Comments
Post a Comment