WHO என்று சுருக்கமாக அழைக்கப்படும் அகில உலகச் சுகாதார நிறுவனத்திற்கும். டின் பால், புட்டிப் பால் தயாரிக்கும் வியாபார நிறுவனங்களுக்கும் இடையில் இப்போது ஒரு போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது.
குழந்தைகளுக்கு ஊட்டும் செயற்கைப் பாலுணவைக் கட்டுப் படுத்த உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
தாய்மார்களின் உள்ளங்களில் ஒரு தவறான எண்ணத்தை குழந்தைப் பால் தயாரிப்பாளர்கள் சிலர் பத்திரிகை, சினிமா விளம்பரங்கள் மூலம் பிரசாரம் செய்து வருகிறார்கள். தாய்ப் பாலை விடப் புட்டிப் பாலே புஷ்டி அளிப்பது, ஆரோக்கியம் அளிப்பது என்றெல்லாம் கருத்தைப் பரப்பிப் பாலுணவு விற்பனை மூலம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஆதாயம் தேடி வருகிறார்கள்.
இந்திய அரசு, டின்களில் விற்பனை செய்யும் குழந்தைப் பால் உணவை நான்கு மாத குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்று கட்டுப் பாடும் விதித்திருக்கிறது.
புட்டிப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு அப்படி என்ன கெடுதல்கள் ஏற்படுகின்றன? என்ற உண்மையை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.
விளம்பரத்தால், வியாபாரத் தந்திரத்தால் தாய்ப் பாலின் சிறப்பைத் தெரிந்து கொள்ள முடியாமல், வியாபாரிகள் செய்து விடுகிறார்கள். இதனால் உண்மை நீறு பூத்த நெருப்புப் போலக் காட்சியளிக்கிறது.
தாய்ப்பாலின் நன்மைகள் :
மனிதன் தோன்றிய நாள் முதல், தன் குழந்தைக்கு ஒரு தாய், பாலூட்டி வளர்ப்பதைப் பார்க்கிறோம்.பிராணிகளும் மிருகங்களும் பாலூட்டி வளர்க்கின்றன.
குட்டிகளுக்குப் இது இயற்கை முறையில் அமைந்த பால். கலப்படம் செய்ய முடியாத பால். எல்லாச் சத்துக்களும் தேவையான அளவில் பொருந்திய பால்.
உடல் வளர்ச்சிக்குத் தேவையான அளவில் அமினோ அமிலங்கள் இயற்கையாக இடம் பெற்ற பால், புரதச் சத்தும் நிரம்பப் பெற்ற பால். எல்லாத்தாது உப்புக்களும் இணைந்த நிகரற்ற பால்.
தாய்ப்பாலில் சீம்பால் என்று சொல்லப்படும் ஒரு விதச் சத்து சிறப்பாக அமைந்திருக்கிறது. இந்தப் பாலைக் குழந்தை சாப்பிடுவதன் மூலம் சிசுப் பருவத்தில் இளம்பிள்ளை வாதம், நிமோனியா, பற்சிதைவு போன்ற நோய்கள் தடுக்கப் படுகின்றன.
தாய்ப் பாலிலுள்ள இரசாயன அமைப்பு மூளை வளர்ச்சிக்குத் துணை செய்கிறது. கண்களுக்கு ஒளியைத் தருகிறது. தாய்ப்பால் குடிக்கும் குழந்தை நோய் எதிர்க்கும் சக்தியைப் பெறுகிறது.
இதனால் தொற்று நோய்கள் இந்தக் குழந்தையிடம் வாலாட்டுவதில்லை. ஒரு தாய், குழந்தைக்குப் பாலூட்டுவதன் மூலம் தினசரி சுமார் 100 கலோரிகள் வரை சக்தியைப் பெறுகிறாள்.
இதனால் உடற்கட்டுக் குலைந்து போகாத வகையில் சிறப்பான பொலிவைப் பெறுகிறாள். தாய்ப்பாலில் பசும்பாலைவிட இரண்டு மடங்கு இரும்புச்சத்தும், தாமிரச் சத்தும் இருப்பதால் குழந்தைகள் சோகை நோயினால் பாதிக்கப்படுவதில்லை.
இதைவிட முக்கியமான ஒரு சிறப்பு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குக் கிடைக்கிறது. பிரசவத்தால் விரிவடைந்த கர்ப்பப்பை சீக்கிரத்தில் இயற்கை நிலைக்குத் திரும்புகிறது. தாயின் உடல் நலமும் முன் இருந்து நிலைக்கு வருகிறது.
பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்புப் புற்று நோய் ஏற்படுவதில்லை என்கிறார்கள் புற்று நோய் ஆராய்ச்சியாளர்கள், தாய்ப் பால் கொடுத்துக் கொண்டு வருவதால் அடுத்த குழந்தை பிறப்பதைத் தள்ளிப் போட வாய்ப்பு ஏற்படுகிறது. தாய்ப் பால்குடிக்கும் குழந்தைகளின் தாடை எலும்புகள், தசைகள் நன்கு வளர்ச்சி பெற்று அழகைப் பெறுகின்றன.
டின்பால், புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகளுக்குப் பேதி, மலச்சிக்கல், பால் சுக்குதல் போன்ற தொந்தரவுகளும் அலர்ஜி, தோல் நோய்கள், சுவாசக் கோளாறுகள், சிறுநீரகத் தொல்லைகள் நாளடைவில் உண்டாகின்றன.
இயற்கைப் பாலோடு, செயற்கைப் பால் போட்டி போட முடியுமா?
புட்டிப் பால் கொடுக்கும் நாய்மார்கள் பலர் பால் கொடுக்கும் புட்டியைச் சுத்தமாகக் கழுவி உபயோகிப் பதில்லை. இதனால் நோய்க் கிருமிகள் புகுந்துகொண்டு தொற்று நோய்களை உண்டாக்குகின்றன.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் தான் நேரப்படி பால்கொடுக்க வசதி இல்லாமல் புட்டிப்பாலைத் தேடி அலைகிறார்கள் தாய்ப்பால் போதவில்லை என்ற காரணம் காட்டிடின்பாலுக்குத் தாவுகிறார்கள்.
இன்னும் சில தாய்மார்கள் தங்கள் உடல் அழகு கெட்டுவிடுவதாகக் கற்பனை செய்து கொண்டு செயற்கைப் பாலுக்குக் கட்சி மாறுகிறார்கள்.
இவையெல்லாம் மனக்குறைபாடுகளே தவிர, தீர்க்கப் படமுடியாத பிரச்சனைகள் அல்ல. ஒரு டாக்டர் சொல்லுகிறார்: பால்புட்டியும், சாராய புட்டியும் ஒன்று என்று, இவற்றால் தீமை வளருகிறதே தவிர நன்மைகள் வளர்வதில்லை.
தாய்ப்பால் கொடுக்கக்கூடாத சில நோய்கள் தூாய்மார்களைத் தாக்கும் போது தற்காலிகமாக இந்தப் பாலை நாடலாம். ஆனால் இதையே நிரந்தரமாக்கிவிடக் கூடாது. நம்பியிருக்கக் கூடாது.
உலகத்தில் தாய்ப்பாலுக்கு நிகராக இன்னொரு பால் எந்த விஞ்ஞானியாலும் இதுவரை கண்டுபிடிக்கப் படவில்லை.
இது ஒன்றே குழந்தைக்கு ஆரோக்கியம் அளிப்பது தாய்ப் பாலா, புட்டிப்பாலா என்ற கேள்விக்குப் பொட்டில் அடித்தது போல் பதில் சொல்லிவிடும்!
Comments
Post a Comment