Skip to main content

Google ads

எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதா ? கெட்டதா? -

 தமிழ்நாட்டு வழக்கம், மாதத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ தலைக்கு எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகிக் கொள்வது. தலைமுறை தலைமுறையாக நடந்துவரும் தலைமுழுக்குப் பழக்கம் இப்போது குறைந்து கொண்டு வருகிறது.

வாழ்க்கையில் ஒரு விஷயம் தேவை என்று நாம் நினைக்கும்போது அது தேவையான காரியமாகிறது. தேவை இல்லை என்று நினைக்கும்போது அது தேவையற்றதாகிறது! ஆனால் உடல் நலத்திற்குத் தேவையாகும் போது ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே!

எண்ணெய்த் தலைமுழுக்குத் தேவைதானா? என்ற கேள்வி, படித்தவர்கள் மத்தியில் ஒரு பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. ஆங்கில வைத்தியர்கள் பலர் எண்ணெய்த் தலைமுழுக்கால் பயன் இல்லை என்கிறார்கள்.


 ஆனால் அதற்கு மாறாகச் சித்த வைத்தியர்களும், ஆயுர்வேத வைத்தியர்களும், எண்ணெய் முழுக்கு அவசியம்தான். இதனால் ஏராளமான நன்மைகளும் உண்டு என்று வாதித்துக்கொண்டு வருகிறார்கள்.

குளிர்ச்சி மிகுந்தது மேல்நாடு. வெப்பம் நிறைந்தது இந்திய நாடு. மேலைநாட்டார் குளிப்பதில்லை. இந்தியர்கள் குளிக்காமல் இருப்பதில்லை.

 வெம்மையின் கொடுமையைத் தணிக்க உச்சி குளிர நல்லெண்ணெயையோ அல்லது தேங்காய் எண்ணெயையோ தலைக்குத் தடவிக் கொண்டும். உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டும் ஊறவைத்து, சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்ற பிறகு குளிக்கிறார்கள். 

சிகைக்காய் அல்லது அரப்புத்தூள் தேய்த்து எண்ணெய்ப் பிசுபிசுப்பைப் போக்கி நீராடுகிறார்கள். கிராமத்து மக்கள் ஆறு குளங்களிலும், நகரத்து மக்கள் குளியல் அறையில் தண்ணீரோ, வெந்நீரோ ஊற்றிக் குளிக்கிறார்கள். இப்படிக் குளிப்பதிலே ஒரு சுகம் இருப்பதாகவும் நம்புகிறார்கள்.

மண்டை ஓடு தலையில் தேய்க்கும் எண்ணெய்யை ஈர்த்துக்கொள்வதில்லை. இதனால் மூளை குளிர்ச்சி அடைகிறது என்ற வாதமே தவறு என்கிறார்கள் டாக்டர்கள். 

உடம்பிலுள்ள வியர்வைத் துவாரங்கள் எண்ணெய்ப் பிகபிசுப்பால் அடைத்துக் கொள்கின்றன. உடம்பின் உள்ளே எண்ணெய் செல்வதில்லை. மேலும் நமது சருமத் துவாரங்கள் ஒரு வழிப்பாதையாக அமைந்திருக்கின்றன. உள்ளே இருக்கும் வியர்வை வெளியே வருமே தவிர, வெளியிலிருக்கும் நீர்ப் பொருள் உள்ளே செல்ல வாய்ப்பில்லை என்கிறார்கள்.

தமிழகத்தில், இந்தியாவில் சித்தர்களும், ஆயுர்வேத வைத்திய நிபுணர்களும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே எண்ணெய்க் குளியல்களால் ஏராளமான நன்மைகளை இந்த உடல் பெற்றுக்கொண்டு பயனடைந்து வந்திருப்பதாக ஆதாரம் காட்டுகிறார்கள். 

தமிழர்கள் 'சனி நீராடு' என்று மருத்துவ யோசனைகளைக் கூறினார்கள். வாரம் இரண்டு நாட்கள் எண்ணெய்யால் தலைமுழுகு என்கிறார்கள். ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய். வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் முழுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று உடல் வறட்சிக்கு வழி கூறினார்கள். 

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. உடல் நலம் பெருகும் என்று பழமொழியினால் பாதை வகுத்துக் காட்டினார்கள்.



எண்ணெய் முழுக்கு ஆரோக்கியத்தின் திறவுகோல். நாள் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, ஆண்டு இரண்டு என்று இரட்டை விரல்களைக் காட்டினார்கள்.

 தினசரி இர முறை மலம் கழிக்கவும், வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் எடுக்கவும், மாதத்தில் இரண்டு நாட்கள் தாம்பத்தியம் கொள்ளவும், ஆண்டில் இரண்டு முறை குடலைச் சுத்தம் செய்துகொள்ள பேதி மருந்து சாப்பிடவும் நம் முன்னோர் நெறிமுறைகளை வகுத்தார்கள்.

சித்த, ஆயுர்வேத முறைகளில் சுமார் 37 தைல முறைகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றுள் சில உள் மருந்தாகவும், சில வெளிப்பூச்சு மருந்தாகவும் மூலிகைச் சாறுகளை எண்ணெயுடன் கலந்து தேய்த்துக் குளித்தால் நோய்கள் அணுகாது என்றும் சொல்கிறார்கள்.

 உடல் வெப்பத்தால் பல நோய்கள் உண்டாகின்றன. எண்ணெய்க் குளியல் வெப்பத்தைப் போக்கி, கண்களுக்குக் குளிர்ச்சியை உண்டாக்குவதாகப் பல மூலிகைத் தைலங்களை அறிமுகம் செய்து அவற்றின் செய் முறைகளையும் கூறிச் சென்றார்கள்.

தலையில் உண்டாகும் வியர்வை சிக்குகளைப் போக்கவும், சீபம் என்று சொல்லப்படும் நச்சுப்பொருளை அகற்றவும், மூட்டுவாதம் பக்கவாதம், பீனிசம், ஒற்றைத் தலைவலிகளைப் போக்கவும், நல்ல உறக்கம் உண்டாகவும் உடல் புத்துணர்ச்சி பெறவும் தைல முறைகளை உண்டாக்கிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆங்கில வைத்தியமுறை டாக்டர்களும் ஏற்றுக்கொள்ளும் முறையில் தைலங்களை இப்போது நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

 மேல் நாட்டிலும் எண்ணெய்க் குளியல் முறைகளால் பயன் உண்டு என்று ஆய்வு செய்யப்பட்டு நீராவிக் குளியல், சூரிய ஒளிக்குளியல் சில நேரங்களில் மூலிகை எண்ணெய்களை மசாஜ் செய்து தேய்த்துக்கொண்டு அதன் பயன்களைப் பெற்று வருகிறார்கள்.

உடல் சூடு தணிய சீந்தில் கொடித் தைலம், நெல்லித் தைலம், அருகம்புல் தைலம், கீழாநெல்லித் தைலம், கரிசலாங்கண்ணித் தைலம் ஆகியவற்றால் கண்களுக்குக் குளிர்ச்சியும் ஏற்படுவதாக இந்த எண்ணெய்த் தலை முழுக்கு மூலம் பயனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

சித்தர்களும், முனிவர்களும் கையாண்ட மருத்துவ முறைகள் இப்போது ஆய்வு செய்யப்பட்டு மேலை நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் கொஞ்சங் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆங்கில மருத்துவ முறைகளை ஏற்றுக்கொண்ட டாக்டர்களும் இப்போது ஒப்புக்கொண்டு வருகிறார்கள்.

எண்ணெய்த் தலைமுழுக்கு பயனில்லாதது என்று சொல்லிவிட முடியாது. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் சித்த மருத்துவர்களையும், ஆயுர்வேத மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி முறையோடு தலை முழுகினால் பயன் உண்டு. 

ஆங்கில மருத்துவத்தில் அதீதப் பற்றுக் காரணமாக, தமிழ் வைத்திய முறைகளை அடியோடு தலைமுழுகி விடாதீர்கள். சாமானியப்பட்டவர்கள் அல்லர்!

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...