நீரிழிவு நோய் என்று மொத்தமாக ஒரு நோயைப் பற்றிச் சொன்னாலும் இதில் நூற்றுக்கு மேற்பட்ட நோய் வகைகள் இருப்பதாகச் சித்தவைத்தியர்கள் சொல்லுகிறார்கள்.
இதில் நோயாளிகள் அனுபவிக்கும் நீரிழிவு நோய் எந்த வகையைச் சேர்ந்தது என்பது அவர்களுக்கே தெரியாது. நீரிழிவு நோயைப்போல் தோன்றும் சில நோய்கள் உங்களிடத்தில் இருக்கலாம். குறி குணங்கள் சில, நீரிழிவை ஒத்திருக்கும். இவற்றை ஆராய்ச்சி செய்து கொண்டு காலத்தைக் கடத்த வேண்டாம்.
முதலில் பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்ததா என்று தெரிந்துகொள்ளுங்கள். இருந்தது என்று அறிந்தால் இந்த நோயைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
பெற்றோருக்கு இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வரலாம் என்று வைத்திய சாஸ்திரம் சொல்லுகிறது. முப்பது வயதிற்குப் பிறகு அது தலையை நீட்டும். சிலருக்கு இளவயதிலும் தோன்றலாம்.
நீரிழிவு நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் ?
1) இளவயதிலிருந்தே உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டால் இந்த நோயினால் உங்களுக்குத் தொந்தரவு ஏற்படாது.
2) சர்க்கரை, இனிப்புப் பண்டங்களை, மாவுப் பண்டங்களைக் கூடுமான அளவுக்குக் குறைக்க இப்போதிருந்தே திட்டமிடுங்கள். கொழுப்புப் பதார்த்தங்களையும் குறைத்துக்கொள்ளுங்கள். உடல் குண்டாகி வருவதைத் தடுத்து நிறுத்துங்கள். அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
3) அளவுக்கு மீறிச் சாப்பிடுவதையும் குறைத்துக் கொள்ளுங்கள்.
4) அடிவயிறு பெருக்காமல், கனக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
உடல் பருமன் ஆயுளைக் குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம். இருதய நோய் எல்லாம் வருகின்றன. ஆகவே உணவைக் குறையுங்கள்.
5) உடல் உறுப்புக்களுக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வு கொடுங்கள். எப்படி ஓய்வு கொடுக்கலாம்? மாதத்தில் ஒரு நாள் முடிந்தால், முடியாதென்றால் வாரத்திற்கு ஒரு நாள் பட்டினி இருக்கலாம். இதனால் உடல் உறுப்புக்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. ஒரு வேளை உணவை முதலில் நிறுத்தி வழக்கப் படுத்திக்கொள்ளுங்கள்.
6) விருந்துகளில் கலந்துகொள்ளுங்கள். ஆனால் சாப்பாடு நேரம் நெருங்கும்போது நழுவிவிடுங்கள்.
7) அப்படியே சாப்பிட உட்கார்ந்து விட்டால் இனிப்புப் பண்டங்களை உண்ணாமல் விட்டுவிடுங்கள். காப்பி டீ சாப்பிடுவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள்.
8) சர்க்கரையின் அளவைக் குறைக்க முடிந்தால் குறைத்தச் சாப்பிடுங்கள்.
9) நீங்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஆசனத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதைத் தவிர்த்து, அலுவலகப் பணிகளுக்கு இடையில் சற்று நடந்து பிறகு அமர்ந்து வேலை செய்யுங்கள்.
10) அலுவல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பூங்காவிலோ அல்லது வேறு வேலைகளுக்காகவோ ஒரு மைல் நடந்து பழகுங்கள்.
11) உணலில் சாதத்தின் அளவைக் குறைத்துக் கோதுமை, கேழ்வரகு கூழ் அல்லது புட்டு செய்து சாப்பிடுங்கள். வல்லாரைக் கீரை, வாழைப்பூ, வேப்பம்பூ துவையல், புதினாக் கீரையை உணவில் சேர்த்தக் கொள்வது நல்லது.
Comments
Post a Comment