நாம் உண்ணும் உணவு ஜீரணமாகி அது மலமாக வெளியே தள்ளப்பட 30 அடி நீளமுள்ள பாதையைக் கடக்கவேண்டியிருக்கிறது. இதன் வழியாகத்தான் காலை உணவு, மதியஉணவு, இரவு உணவு ஆகிய மூன்று வேளை உணவுகளும் செல்கின்றன.
அப்போது தேவையான சத்துக்கள் ஆங்காங்கே எடுக்கப்பட்டுச் சக்கையாக வெளியேற்றப்படுகின்றன. உணவு இரைப்பைக்குக் கடக்கச் சுமார் நான்கு மணி நேரம் முதல் ஆறுமணி நேரம் ஆகிறது.
அதன் பிறகு சிறுகுடல், பெருங்குடல், மலக்குடலைச் சென்றடைய 36 மணிநேரம் முதல் 48 மணி நேரம் ஆகிறது. இதன் பிறகுதான் இயல்பான சூழ்நிலையில் வெளியேற்றப்படுகிறது. காத்திருக்கவேண்டும்.
அதுவரையில் நாம் இயற்கையின் தூண்டுதல் ஏற்படும்போது நாமே உணர்ந்துகொண்டு வெளியேற்றும் வேலையைச் செய்கிறோம். நாம் அடிக்கடி சாப்பிடுவதால், அதிக அளவு சாப்பிடுவதால், சற்றுக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவதால் மலத்தை வெளியேற்றும் வேலைகள் சில, சமயங்களில் தாமதமாகிறது. இன்னும் சிலருக்கு அடுத்த நாள் வெளியேறாமல் அதற்கு அடுத்த நாள் வெளியேறுகிறது.
இது தொடரும்போது பேதி மருந்து சாப்பிடலாமா என்ற எண்ணம் உண்டாகிறது. இயல்பான முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்கை முறையில் வெளியே தள்ளப் பேதி மருந்துகளைத் தேடுகிறோம்.
இது சரியான முறையா என்றால் இல்லை. சிலருக்கு இரண்டு நாள், மூன்று நாள் கூட ஆவதுண்டு. இதை மலச்சிக்கல் என்று முடிவு செய்து பலாத்கார முறையில் வெளியேற்றுகிறோம். இதற்கு உதவுபவை பேதி மருந்துகள்.
கழிவுப் பொருள் குடலில் தங்குவதால் நஞ்சாகிறது. ஆகவே கழிவை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று சொல்லும்போது மேலெழுந்த வாரியாக நியாயமாகப் பட்டாலும் இது சரியான கருத்தல்ல என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பேதி மருந்துகளை இன்று ஏராளமான மருந்துக் கம்பெனிகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்புகின்றன. இதில் சேர்க்கப்படும் இராசாயனப் பொருட்கள் குடலில் உறுத்தலை உண்டாக்குகின்றன.
விளக்கெண்ணெய், எப்சம் சால்ட் போன்றவைகூடக் குடல்களை மூடியிருக்கும் மெல்லிய கோழைப்படலத்தை உறுத்துகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
குடலில் சஞ்சாரம் உணவுப் பொருள், குடல் சுவர்களிலுள்ள தசை நார்களால் சுருங்கிக் சுருங்கி மெல்ல வெளியே நகரும்படி செய்கிறது. இந்தக் கால கட்டத்தில் சத்துக்கள் மெதுவாக உறிஞ்சப்பட்டு இரத்தத்துக்குச் செல்லுகிறது.
பேதி மருந்துகளால் உணவுப் பொருள் உந்தப்படும்போது சத்துக்களை உறிஞ்ச முடியாமல் சிறு குடலிலிருந்து பெருங்குடலுக்கு விரைவாய்த் தள்ளப்படுகிறது.
இதனால் தேவையான சத்துக்களைப் பெறமுடியாமல் போய் விடுகிறது. பேதி மருந்துகள் அதிகமான அளவு பெருங்குடலைத்தான் தாக்குகின்றன. உணவிலுள்ள ஊட்டச்சத்தைப் பெறமுடியாமல் செய்கின்றன பேதி மருந்துகள்.
பெருங்குடலின் உட்பகுதியிலுள்ள உறையில் அழற்சி ஏற்படுகிறது. இதனால் பெருங்குடல் சீர்குலைந்து போகிறது. வயிற்றில் வலி, வயிறு வீக்கம், குடல் இரைச்சல் ஏற்படுகிறது. உறுத்தல் ஏற்படும்போது குமட்டல் வாந்தி உண்டாகிறது. உடலும் மனமும் தளர்ந்துபோகிறது என்று மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
பேதி உப்பு.பேதி எண்ணெய், மலமிளக்கிளி என்று பல பெயர்களில் அழைத்தாலும் பெருங்குடலுக்கு இவற்றால் தீமையே. பெருங்குடலில் விஷக்கிருமிகளோடு சேர்ந்து தலைவலி, பசியின்மை, சோர்வு ஆகிய அறிகுறிகளை உண்டாக்கி தொல்லை கொடுக்கிறது.
அடிக்கடி பேதி மருந்துகளைச் சாப்பிடுவதால் மலக்குடல் விரிந்து தளர்ந்துபோகிறது. இயக்கும் சக்தி குறைந்துவிடுகிறது. மலத்தை வெளியே தள்ளும் ஆற்றலை இழந்துவிடுகிறது.
கனிம எண்ணெய்களைச் சிலர் பேதி மருந்தாகச் சாப்பிடுகிறார்கள். இவை வைட்டமின் A, வைட்டமின் D ஆகிய சத்துக்களை உறிஞ்சிவிடுகின்றன. இதனால் வாய்வுத் தொந்தரவுகள் உண்டாவதாக அல்லோபதி டாக்டர்கள் கூறுகிறார்கள்.
கனிஜ எண்ணெய்கள் உறுத்தா. மாறாக, வழவழப்பைத் தந்து மலமிளக்கியாக உதவிகிறது. என்று ஒரு சாரார் கூறுகிறார்கள்.
இதில் இன்னோர் அபாயம் உண்டு. குடல்வால் அழற்சி ஏற்படும்போது வயிற்றில் வலி தோன்றும். மலம் வெளியேறாததால் இந்த வலி உண்டாகிறது என்று பேதி மருந்து சாப்பிட்டுவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும்.
பேதி மருந்து சாப்பிடாமலேயே மலச்சிக்கலைப் போக்க எத்தனையோ வழிகள் இருக்கும்போது அனாவசியமாக பேதி மருந்தை ஏன் சாப்பிடவேண்டும்?
தண்ணீரைத் தேவையான அளவு தினசரி குடித்து வந்தால் மலச்சிக்கல் உண்டாகாது. கீரைகள், பழங்கள் சாப்பிட்டு வந்தால் எளிமையான முறையில் மலத்தை வெளியேற்றலாம். மிதமான உணவு, சாத்வீகமான உணவு வகைகளால் வயிற்றுக்கு எந்தக் கெடுதலும் வருவதில்லை.
தினசரி வாக்கிங் செய்வதன் மூலம், உடற்பயிற்சிகளை செய்வதன் மூலம் பேதி மருந்து சாப்பிடாமலேயே கழிவுகளை வெளியேற்றலாம். தேவைப்பட்டால் எனிமா எடுத்துக்கொள்ளலாம். பெருங்குடல் ஒரு பாதுகாப்பான உறுப்பு. அது சீர்குலையும் படி விட்டுவிடக் கூடாது.
Comments
Post a Comment