கதிர் வீச்சுக்களின் மூலம் நோயைக் கண்டு பிடிக்கவும். அதைக் குணப்படுத்தவும் கூடிய சிகிச்சை முறையான எக்ஸ்-ரே சாதனத்தைக் கண்டுபிடித்து அதைச் செயல்முறைக்குக் கொண்டுவந்தார் ராஞ்சன் என்ற விஞ்ஞானி.எக்ஸ் ரே கண்டுபிடிக்கப்பட்டுச் சுமார் 90 ஆண்டுகள் ஆகின்றன.
உடல் உறுப்புக்களில் கதிர் ஊடுருவும் விதத்தைக் கொண்டு சாதாரண எக்ஸ்ரே அல்லது பிளெயின் எக்ஸ்-ரே என்ற ஒரு முறையும், கதிர் ஊடுருவ முடியாத சூழ் நிலையில் மருந்துகளைப் பயன்படுத்தி உறுப்பின் தோற்றத்தைத் தெளிவாக்கும் இன்னொரு முறையும் ஆகிய இரண்டு முறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன.
இதில் இரண்டாவது முறை எக்ஸ்-ரேவை (Contrast studies) என்றும் எக்ஸ்-ரே நிபுணர்கள் இனம் பிரித்து வைத்திருக்கிறார்கள்.
எக்ஸ்-ரே கதிர் சில உறுப்புக்களில் பாய்ச்சப்படும் போது அது தங்கு தடையில்லாமல் வெளியே சென்று விடும்.
இதனால் உள் உறுப்பின் தோற்ற அமைப்பு கண்ணுக்குத் தெரியாது. ஆகவே என்ன பாதிப்பு ஏற்படிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது.
உள் உறுப்பின் தோற்றமும். அந்தப் பகுதியில் தோன்றியிருக்கும் பாதிப்பும் என்னவென்று தெரிந்து கொள்ள சிலவகை மருந்துகளைச் செலுத்தி அதன்பின் எக்ஸ்-ரே எடுக்கிறார்கள். இதனால் கதிர் வீச்சு தடைப்பட்டு உறுப்பின் தோற்றம் தெள்ளத் தெளியக் காட்டிவிடுகிறது. நோய் எந்தப் பகுதியைத் தாக்கியிருக்கிறது என்று நன்கு தெரிந்துவிடுகிறது.
கொஞ்சம் விளக்கமாகச் சொல்லவேண்டும் என்றால் குடல் பகுதியில் ஏற்பட்டுள்ள ஒரு புண்ணைக் கண்டு பிடிக்க பேரியம் மாவுப் பொருளை உள்ளே சாப்பிடும்படி செய்து எக்ஸ்ரே எடுக்கிறார்கள். பேரியம் செல்லும் பாதையில் எங்கே தடைப்படுகிறது என்று தெரியும்.
பெருங்குடலின் உட்பகுதியில், இரணம், கட்டி, சந்துகள் தெளிவாகத் தெரியும். இதனால் நோயின் தன்மைகளைக் கண்டுபிடித்து விடுகிறார்கள்.
இதுபோலவே கெட்ட இரத்தக் குழாய் மூலம் மருந்தைச் செலுத்திப் படம் பிடிக்கிறார்கள். சிறுநீர்க் குழாயில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களைக் கண்டறிகிறார்கள். இதைத்தான் காண்ட்ராஸ்ட் ஸ்டடி என்று எக்ஸ்-ரே நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் மூளை நுரையீரல் ஆகிய எந்த உறுப்புக்களில் பாதிப்பு இருந்தாலும் எக்ஸ்-ரே படம் காட்டி கொடுத்துவிடும்.
இது தவிர ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு ஆழத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க டோமோகிராபிக் என்ற ஒரு வசதியான முறையும் இருக்கிறது. இப்போது உள் உறுப்புக்களில் ஏற்படும் கோளாறுகளைத் துல்லியமாகக் கண்டறிய அங்கியோ கார்டியோ கிராபி, எக்கோ கார்டியோ கிராபி
(Cat scan) என்ற நவீன சாதனங்களும் படிப்பயாக முன்னேறி வந்து எந்த நோயையும் எளிதில் கண்டுபிடிக்க விஞ்ஞான வசதிகள் பெருகிவிட்டன. சென்னையிலேயே இந்த வசதிகள் இப்போது உண்டு.
ஆகவே எக்ஸ்-ரே எடுப்பதால் பாதிப்புக்களும் சிரமங்களும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. எக்ஸ்-ரேயால் எத்தனையோ நன்மைகள் இருந்தாலும் சில தீமைகளும் உண்டு என்பதை டாக்டர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.
விஞ்ஞானம் எவ்வளவு வேகமாகப் பரவினாலும் சில பாதிப்புக்களும் ஏற்படத்தான் செய்கின்றன. இவற்றைத் தவிர்க்க முடியாது. பாதிப்புக்கள் கதிர் வீச்சுக்களாலும் ஏற்படலாம். அதைக் கையாளும் டாக்டர்களாலும் ஏற்படலாம் என்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
ஒரு பெண் கர்ப்பமான ஆரம்ப நிலையில் ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் எக்ஸ்-ரே எடுப்பதைக் கூடியவரை தவிர்க்கிறார்கள், கருவில் வளரும் சிசுவைக் கருத்தில்கொண்டே இப்படிச் செய்கிறார்கள். இது தெரிந்ததே!
புற்று நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு கதிர் இயக்கச் சிகிச்சை செய்யும்போது நோயினால் பாதிக்கப்பட்ட செல்கள் எரிந்து போகின்றன. அதோடு அந்தப் பகுதியில் உள்ள நல்ல செல்களும் எரிந்து போகின்றன. செல்கள் ஒருமுறை அழிந்துபோனால் மீண்டும் புதிய செல்கள் உற்பத்தியாவதில்லை.
இதனால் புற்று நோயாளிகளுக்குப் பாதிப்பு உண்டாகிறது. டீப் எக்ஸ்ரே கதிரியக்கத்தால் குடல் பாதிக்கப்படுகிறது. உணவுப் பொருளை இரத்தத்தில் சேர்க்கும் சக்தியை குடல் இழந்து போகிறது என்று அனுபவம் பெற்ற டாக்டர்களே கூறுகிறார்கள்.
ஆனால் ஒரு சமாதானம் சொல்லப்படுகிறது எக்ஸ்-ரே எடுப்பதன் மூலம் ஏற்படும் பாதிப்பை விட நோயினால் ஏற்படும் பாதிப்பு அதிகம். ஆகவே மிகக் குறைந்த பாதிப்பை கணக்கில் சேர்க்காமல் அதிக நன்மையே எதிர்பார்த்து எக்ஸ்-ரே சிகிச்சையை ஏற்றுக்கொள்ள வேண்டும் வலியுறுத்துகிறார்கள். என்று டாக்டர்கள்
பொதுவாக கதிர் வீச்சுக்களால் ஏற்படும் தீங்குகளைக் குறைக்கப் பலவிதக் கட்டுப்பாட்டு முறைகளை இப்போது கையாளுகிறார்கள். எக்ஸ்-ரே கருவியிலேயே சில அமைப்புக்களை ஏற்படுத்தத் தீமைகளைக் கட்டுப்படுத்தி வருகிறார்கள்.
ஒரு மனிதனுக்கு எந்த அளவுக்கு எக்ஸ்-ரே கதிர்களால் பாதிப்பு ஏற்படுகிறது என்று உலக ரீதியில் தீர்மானித்திருக்கிறார்கள். அந்த அளவை அனுசரித்து எக்ஸ் - ரே நிபுணர்கள் செயல்படுகிறார்கள். இதனால் பாதிப்புக்கள் அதிகம் ஏற்பட வழியில்லை, ஆகவே நிபுணர்களை நம்பி நிம்மதி பெறுவோம்!
Comments
Post a Comment