Skip to main content

Google ads

வலிப்பு நோய்க்கு என்ன முதல் உதவி கொடுக்க வேண்டும் ?-

 ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார். திடீரென்று கீழே விழுகிறார். வாயிலிருந்து நுரை தள்ளுகிறது. கை கால்களை உதைத்துக்கொள்கிறார்.

 கைகளை உதறுகிறார் சில நிமிடங்களில் அப்படியே அமைதியாக இருந்துவிட்டுச் சோர்வுடன் எழுந்து செல்கிறார். இது என்ன நோய்? 

இதற்குக் கைகால் வலிப்புநோய் என்று சொல்லுகிறார்கள் டாக்டர்கள். ஆங்கிலத்தில் எலிலெப்சி என்கிறார்கள்.

இதில் இன்னொரு வகை வலிப்பும் உண்டு. நோயாளி கீழே விழுவதில்லை. சில நிமிடங்களில் விழித்தது விழித்தபடியே இருப்பார்கள் கை கால்களை மட்டும் அசைப்பார்கள். பேச மாட்டார்கள்.

 தலையையும் வலது இடது புறங்களில் திருப்பிக்கொண்டே இருப்பார்கள். இதுவும் ஒருவகை வலிப்பு நோய். இது குழந்தைகளுக்கும் வரும். இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வரும். மூளையில் ஏற்படும் ஒருவகை உறுத்தலே இதற்குக் காரணம் என்று பொதுவாகச் சொல்லலாம்.

இது போன்ற நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ என்ன உதவி செய்யலாம், எப்படி உதவலாம் என்பதை எடுத்துச் சொல்வதே இந்தக் கட்டுரை.

ஒரு நோயாளி வலிப்பால் துடிக்கும்போது வேடிக்கை பார்ப்பவர்கள் தாம் அதிகம். உதவி செய்பவர்கள் குறைவு. 

உதவி செய்வதனால் என்ன செய்யவேண்டும்?

குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்பட்டால் உடம்பைப் போர்த்தி வைக்கக்கூடாது. காற்று உடம்பில் பட வேண்டும். காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்துப்பாதுகாக்க வேண்டும். குழந்தைகள் என்றால் அதிக ஜூரம் இருக்கும். குளிர்ந்த நீரில் ஒரு துணியை நனைத்து நெற்றியில் பதிக்க வேண்டும். 

வலிப்பு உள்ளபோது குழந்தைக்குப் பாலோ ஆகாரமோ கொடுக்கக்கூடாது. குழந்தையின் தலையை ஒருபுறமாகச் சாய்த்து வைக்கவேண்டும். குழந்தையை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குத் தூக்கிச் செல்லும்போது தோளில் செல்லக்கூடாது.

 கைகளில் ஏந்திச் செல்லவேண்டும். அப்போது தலையை ஒரு பக்கம் தாழ்த்தி,தூக்கிக் கொண்டு சரிவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது முக்கியம்.

ஜூரத்துடன் வரும் இந்த வலிப்புக்கும், கை கால் வலிப்புக்கும் வித்தியாசம் உண்டு. ஆகவே வலிப்பு என்றதும் எல்லாம் ஒருவகையைச் சேர்ந்ததே என்று நினைக்கக் கூடாது.

பெரியவர்களுக்கு வரும் கை கால் வலிப்பு நோய்க்குச் சில இடங்களில் கொத்துச் சாவியை அல்லது இரும்பைக் கையில் கொடுக்கிறார்கள். சிலர் இரும்பைப் பழுக்கக் காய்ச்சி சூடு போடுகிறார்கள். இது ஒரு தவறான சிகிச்சை முறை. கிராமங்களில் நடப்பது இது!

வலிப்பு வந்தவர்களை மெதுவாகத் தரையில் கிடத்தவேண்டும். உமிழ் நீர், அல்லதுநுரையை வாயிலிருந்து வழிய பக்கவாட்டில் சாய்த்துக் கிடத்த வேண்டும். இவர்களுக்குப் பல் கிட்டிக் கொள்ளும். இதனால் நாக்கைக் கடித்துக் கொள்வார்கள்.

 கர்ச்சிப்பைப் பந்துபோல் சுற்றி, அல்லது ஒரு ரிப்பனைச் சுருட்டி மேல் கீழ் இரண்டு. பற்களுக்கும் இடையில் வைக்கவேண்டும். உதட்டைக் கடித்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 முகத்தில் சிலர் குளிர்ந்த நீரைத் தெளிப்பார்கள். இது தவறு. சோடா, காப்பி எதையும் இந்தக் கட்டத்தில் வாயில் ஊற்றக்கூடாது. வலிப்பு நின்ற பிறகு வேண்டுமானால் கொடுக்கலாம். வலிப்பு அதிகநேரம் தொடர்ந்தால் உடனே டாக்டரிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.

வலிப்பு ஒரு நோய்தான். ஆனால் தொற்றுநோய் அல்ல. ஆகவே யார் வேண்டுமானாலும் அருகில் இருந்து உதவலாம். சிலர் நெருங்கி உதவி செய்ய பயப்படுகிறார்கள். இப்படி அச்சப்படத் தேவை இல்லை.

வலிப்பு வந்துள்ள நோயாளிகளை உயரமான இடங்களில் ஏறி வேலை செய்வதை அனுமதிக்கக்கூடாது. நெருப்பு அருகில் வேலை செய்யவிடக் கூடாது. ஆபத்தான இயந்திரங்களை இயக்கும் வேலைகளில் அமர்த்தக்கூடாது. 

கார், பஸ், லாரிகளையும் ஒட்ட அனுமதிக்கக்கூடாது. நீச்சல் கூடவே கூடாது. எப்போது வலிப்பு வரும் என்று தெரியாது என்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வலிப்பு வந்து கை கால்களை உதைக்கும்போது கை கால்களை மற்றவர்கள் பிடித்து கட்டுப்படுத்தக் கூடாது. அப்படியே விட்டுவிட வேண்டும். வலிப்பு ஏற்படும் நேரங்களில் அவர்கள் அருகில் ஆபத்தான பொருள்கள் இருந்தால் அவற்றை மட்டும் அகற்ற வேண்டும்.

வலிப்பு நோயாளிகளுக்கு டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளைத் தொடர்ந்து கொடுக்கவேண்டும். இடையில் நிறுத்தக்கூடாது. மூன்று ஆண்டுகள் வரை விடாமல் கொடுக்க வேண்டும். அல்லது டாக்டர் சொல்லும் காலம் வரை கொடுக்க வேண்டும்.

வலிப்புநோய் மருந்தைச் சிலர் மயக்க மருந்து. தூக்கமருந்து என்று நினைத்து நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு. நோயைக் கட்டுப்படுத்த கொடுக்கும் மருந்து என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்து கொடுக்கவேண்டும் நிறுத்தக்கூடாது.

பெற்றோர் இவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது டாக்டர் யோசனைப்படி செய்ய வேண்டும். உண்மையை மறைக்கக் கூடாது. மறைப்பதால் சில விபரீதங்கள் ஏற்படும்.

வலிப்பு நோய் எவருக்கும் வரலாம். இதனால் கேலியோ கிண்டலோ செய்து அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரும்படி செய்யக்கூடாது.

 நோயாளிகளை விட அவர்களுக்கு உதவி செய்பவர்கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு முதலுதவி செய்ய வேண்டும். மற்றவற்றை டாக்டர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...