பொய்களும், போலிகளும் மலிந்துவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
உண்மைகள் இருந்த இடத்தில் போலிகளை இட்டு நிரப்பி அதையும் ஒரு கலையாக அமைத்துவிட்டான் மனிதன்.இதுவும் சில நன்மைகளைத் தந்து நயம்பட வாழ வைக்கிறது.
உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பொய் உறுப்புக்களைப் புகுத்தி மனிதனை நடமாட வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள். அதில் ஒன்று பொய்ப் பற்கள்.
இதை நாகரிமாகச் சொன்னால் செயற்கைப் பற்கள் என்று சொல்லலாம்.இயற்கையான பற்கள் செயலிழக்கும் போது செயற்கைப் பற்களைப் பொருத்தும் மருத்துவத்திற்கு டென்டல் பிராஸ்திசிஸ் என்று சொல்லுகிறார்கள்.
பற்கள், நமக்கு எத்தனையோ நன்மைகள் செய்வதற்குப் படைக்கப் பட்டிருக்கின்றன. முகத்திற்கு அழகு தருபவை பற்கள் அல்லவா?
நாம் உண்ணும் உணவை அரைத்துக் கொடுத்து நமக்குச் செரியானத்தையும் ஊட்டத்தையும் உண்டாக்குபவை பற்கள் அல்லவா?
நாம் பேசும் போது வார்த்தைகளை அழகாக உச்சரிக்க நமக்கு உதவுபவை பற்கள் என்பது சிலருக்குத் தெரியாது.
கன்னங்கள் குழிவிழாமல் இளமையைக் காப்பாற்றுவது பற்களின் அமைப்பு என்பதை எத்தனை அறிந்திருக்கிறார்கள்? அஸ்திவாரம் போடும் பற்கள் இல்லாவிட்டால் எப்படி இருக்கும்?
இவ்வளவுபேர் அவசியத்திற்கு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இயற்கையாக அமைந்திருக்கும் பற்கள் சில காரணங்களால் ஆட்டங் கண்டு விழுந்துவிடுகின்றன. மீண்டும் பல் முளைக்காவிட்டால் என்ன செய்வது?
பிறவியிலேயே சிலருக்குப் பற்களைத் தாங்கி நிற்கும் திசுக்கள் அழிந்துவிடுகின்றன.
இன்னும் சிலருக்கு ஈறு நோய்களால் திசுக்கள் அழிந்து விடுகின்றன. மீண்டும் பற்கள் முளைப்பதில்லை.
விபத்துக் காரணமாகவும் பற்கள் சிதைந்துவிடுகின்றன. பல்வரிசையாகவும் அழகாகவும் அமைந்திருக்க வேண்டிய பற்கள் அலங்கோலமாகவும் அமைந்து விடுகின்றன. அவற்றை மாற்றி அமைக்கவேண்டிய தேவைகளும் உண்டாகின்றன.
பற்களுக்கு மீண்டும் வளர்ச்சி இல்லை என்ற நிலை தோன்றும்போது செயற்கைப் பற்கள் ஒரு பகுதியோ அல்லது முழுவதுமாகவோ புதிதாக அமைக்கும் கட்டாயம் ஏற்படுகிறது.
நீண்டகாலமாகவே பல்செட் கட்டிக்கொள்ளும் பழக்கம் எல்லா நாடுகளிலும் இருந்துவந்திருக்கிறது.
ஒன்றிரண்டு பற்கள் போனாலும் அல்லது கீழ்த்தாடைப் பற்களோ, மேல்தாடைப் பற்களோ போனாலும் பற்களைச் செயற்கை முறையில் செய்து பொருத்திக் கொள்ளும் பழக்கம் சில நூறு ஆண்டுகளாக இருந்து வருகிறது.
ஆரம்பத்தில் மரத்தினால் ஆன பற்களும், பிறகு தந்தம், தங்கத்தினால், எலும்புகளால் ஆன பற்களையும் செய்து வாயில் அமைத்துக் குறைகளை ஈடு செய்து வந்திருக்கிறார்கள்.
நமக்கு மேல்தாடையில் 16 பற்களும், கீழ்த் தாடையில் 16 பற்களும் அமைந்திருக்கின்றன. ஒரு பல்லை இழந்து விட்டாலும் அல்லது வரிசையில் இரண்டொரு பற்கள் விழுந்து விட்டாலும் அதன் அருகிலுள்ள பற்களில் உணவுப் பொருள்கள் சிக்கிக் கொண்டு நோய் பரவுகிறது. இதனால் அடுத்த பல்லும் சேதமாகிறது.
ஆகவே காலி இடங்களை அப்படியே விட்டு விடக் கூடாது. புதுப் பல்லைக் கட்டியாக வேண்டும்.
பல் செட் எப்படி அமைக்கப்படுகிறது?
சீர்கெட்ட பற்களை எல்லாம் எடுத்துவிட்டு மேல் தாடை, கீழ்த்தாடை, பல் எலும்பு மதில், மேல் கீழ் விட்டங்களை அளவெடுத்து வார்ப்புத் தயார் செய்து கொண்டு அதில் பற்களைப் பதிக்கிறார்கள்.
மிருதுவான ஆனால் உறுதியான வழவழப்பான ஒருவித வஸ்துவினால் கன்னம், உதடு, ஈறு அண்ணம் ஆகியவற்றை உறுத்தாமல் சரியான அளவோடு பதிக்கிறார்கள்.
இதற்குச் செலவு அதிகம் என்றாலும் தேவையை முன்னிட்டுப் பல் செட் கட்டிகொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
புதிதாக பல்செட் கட்டிக் கொள்பவர்களுக்குச் ஏற்படும் சிரமங்கள் என்னென்ன?
அந்தச் சிரமங்களை பொருட்படுத்தக் கூடாது. பழகும்வரை சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். பிறகு பொருத்திவிடும்.
உணவுப் பொருள்களை செயற்கைப் பற்களால் அரைக்கும்போது ஈறு பரப்புக்குமேல் பொருந்தி இருக்கும் பற்கள் அதிக அழுத்தத்தைத் தாங்க முடியாமல் வலி எடுக்கலாம்.
ஆரம்பத்தில் கடினப் பொருட்களைச் சாப்பிடாமல் மிருதுவான, உடைத்த சிறுசிறு பகுதிகளை மட்டும் சாப்பிட்டுப் பழகவேண்டும்.
சளிப்படலம் என்று ஒன்று இருக்கிறது. அது தடித்து விடும் இதன் மீது செயற்கைப் பற்கள் அழுத்தும் போது பொருந்துவதில்லை. வலி எடுக்கும்.
ஆபரேஷன் மூலம் சரி செய்யப்பட்டுப் பொருத்தி விட்டால் சரியாகிவிடும்.
இதில் கவனிக்கவேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. நாக்கின் அசைவிற்கு ஏற்ற முறையில் தொந்தரவு இல்லா முறையில் பல் செட் இருக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான நீளமில்லாமல் வாய்க்கு அடக்க மாக இருக்கவேண்டும். சளிப் படலத்தைக் குத்தாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். விளிம்புகள் வழுவழுப்பாக இருக்க வேண்டும். பேசுவதற்கு இடையூறு இல்லாமல் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.
முன் பற்கள் நீண்டிருப்பதால் வாயை மூடமுடியாது. திசுக்களில் வலி தோன்றினால் பல் செட்டை மாற்றி அமைக்கலாம்.
செயற்கைப் பற்களை வைத்திருப்பவர்கள் பல் செட்டைத் தினசரி உணவு சாப்பிட்டவுடன் பிரஷ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
இரவில் செட்டைச் சுழற்றிக் குளிர்ந்த தண்ணீரில் போட்டு வைக்கவேண்டும். சோப்புப் போட்டுக் கழுவித் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
சிரமமாகவும். வார்த்தைகளை உச்சரிக்கக் கஷ்டமாகவும் இருக்கும். உடனே இது சரியில்லை என்று ஒதுக்கிவிடக்கூடாது.
ஆரம்பத்தில் எந்த வாயும் பேசுவதற்கு பொய்ப் பற்களை ஏற்பதில்லை.பழக்கம் ஆகிவிடும். பழகி விட்டால் பொய்யும் உண்மைபோல்.
Comments
Post a Comment