நோய் உடலைத் தாக்கும் போது நோயாளி பலவீன மடைகிறான். உடலின் இயக்கம் தளர்ந்து போகிறது. பசி இல்லை. நல்ல தூக்கம் இல்லை. இதனால் உடல் சோர்ந்து போகிறது. மனமும் பாதிக்கப்படுகிறது.
ஆகவே நோயாளியை நல்ல காற்றோட்டமுள்ள அறையில், வெளிச்சம் உள்ள அறையில் ஓய்வாக இருக்கும் படி வைக்க வேண்டும். வெப்பமோ, குளிரோ தாக்காமல் நோயாளியைப் பாதுகாக்கவேண்டும்.
ஒருவருக்கு ஜூரம் வரும்போது மூளையும் நரம்புகளும் தங்களுக்கு வேண்டிய போஷிப்பை பெற்றுக் கொள்வதில்லை. இதனால் தளர்ச்சியும் வலிப்பும்கூட உண்டாகும். இழுப்பும் தோன்றும். இருதயம் அளவுக்கு அதிகமாகத் துடிப்பதால் அதன் முறையான வேலைகளும் பாதிக்கப் படுகின்றன.
இது தவிரச் சிறுநீரகங்கள் கழிவுப் பொருளை வெளியே தள்ள முடியாமல் தளர்ச்சியடைந்து போகிறது. இதனால் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. உடல் தளர்ந்த நிலையில் வேறு சில தொற்று நோய்களும் இந்தக் கட்டத்தில் தாக்கலாம்.
பெரியம்மை, தட்டமை தொற்றலாம். ஆகவே நோயாளி வெகு சுவனமாக இருக்க வேண்டும். ஜூரத்தை முற்றவிடாமல் மருந்துகளாலோ அல்லது உணவுகளாலோ அதிகமாகாமல் டாக்டருடன் சிகிச்சை முறையில் ஒத்துழைக்க வேண்டும்.
ஒரு டாக்டரிடம் மருந்து சாப்பிடுவது; இவர் சரியில்லை என்று வேறு டாக்டரிடம் செல்வது; இந்த மருந்து சரியில்லை என்று வேறு மருந்துகளைத் தானே வாங்கிச் சாப்பிடுவது; தன் வீட்டில் இதற்குமுன் காய்ச்சலுக்கு என்ன மருந்து சாப்பிட்டார் என்று தெரிந்து அந்த மருந்தை வாங்கிச் சாப்பிடுவது; ஆகியவை கோளாறுகளையே உண்டாக்குகின்றன.
நண்பர்களோ, உறவினர்களோ தாங்கள் சாப்பிட்ட மருந்துகளை எல்லாம் டாக்டரிடம் கேட்காமல் சாப்பிடுவதால் கோளாறு ஏற்பட்டு நோயை முற்றவிட்டு விடுகிறார்கள் சிலர்.
நோய்க்காலத்தில் நாக்குக்கு ருசி இல்லை என்று ஆசைப்பட்ட உணவுகளை சாப்பிட்டு நோயை வளர விடுகிறார்கள் சிலர், திடமான உணவுகளை விலக்கித் திரவ ஆகாரத்தையே உண்ணுவதுதான் நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். நோய்க் காலத்தில் என்ன உணவு சாப்பிடவேண்டும் என்று டாக்டரிடம் கேட்டு அந்த உணவுகளையே சாப்பிடவேண்டும்.
கடின நோய்களுக்குக் கஞ்சி உணவே சிறந்தது. திரவ உணவை உறிஞ்சிக் குடிக்கலாம். விழுங்கச் சிரமமாக இருந்தால் பத்து நிமிஷத்திற்கு ஒரு தடவை கொஞ்சங் கொஞ்சமாகச் சாப்பிடலாம்.
நோய் குணமாகிறது என்று தெரிந்தால் பழச்சாறு, சூப் சாப்பிடலாம். ஆனால் அவசரப்பட்டு மசாலா உணவுகளைச் சாப்பிட்டு விடக்கூடாது.
மருந்துகளில் அளவு உண்டு. எத்தனை வேளை சாப்பிடவேண்டும் என்று விதி இருக்கிறது. காலை ஒரு மாத்திரை, மதியம் ஒரு மாத்திரை இரவு ஒரு மாத்திரை என்றால் அதன்படிதான் சாப்பிடவேண்டும். கரண்டி அளவில், அவுன்ஸ் அளவில் சாப்பிடக் கூடிய சில திரவ மருந்துகள் உண்டு.
அவற்றையும் முறைப்படி சாப்பிட வேண்டும். நோய் சீக்கிரம் குணம் ஆகவேண்டும் என்பதற்காக மூன்றுவேளை மருந்தையும் ஒரே வேளையில் குடித்துக் காலியாக்கிவிடக்கூடாது. மருந்துகளைச் சாப்பிடும் நேரத்தையும் சாப்பாட்டிற்கு முன்பா, பின்பா என்று தெரிந்து சாப்பிட வேண்டும்.
சில மருந்துகள் வெறும் வயிற்றில், வயிறு காலியாக இருக்கும் நேரத்தில் சாப்பிடவேண்டும் என்று நியதிகள் உண்டு ஆஸ்பிரின் கலந்த மருந்து, இரும்புச் சத்து மருந்து, வைட்டமின் மருந்து பி.ஏ.எஸ். மருந்துகளைச் சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிட வேண்டும். அப்போதுதான் மருந்தின் வீரியம் உடலைப் பாதிக்காது வேளை அறிந்து, அளவு அறிந்து, டாக்டர் கூறும் நிலை அறிந்து மருந்துகளைச் சாப்பிடவேண்டும்.
அப்போதுதான் மருந்து வேலை செய்யும், நோயும் குணமாகும். நோயாளியோ, அல்லது அவருக்கு உதவி செய்பவர்களோ இதைத் தெரிந்து கொண்டு நோயாளிக்குப் புகட்டவேண்டும். நோய் குணமாக, நோயாளி நோயிலிருந்து தேற இது உதவும் அதை விட்டு விட்டு இஷ்டம் போல் சாப்பிடக்கூடாது.
நோயாளிகள் தங்கள் வெப்ப நிலையை அவ்வப்போது கவனித்துக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஜூரம் உயர்ந்துகொண்டு போகிறதா, குறைந்து கொண்டு வருகிறதா? சுவாசம் எந்த நிலையில் இருக்கிறது?
சிறுநீர், மலம் ஒழுங்காகக் கழிகின்றனவா? சளியில் இரத்தம் வருகிறதா? சுவாசிப்பதில் சிரமம் உண்டா? தூக்கம் எப்படி? வாந்தி, வயிற்றுப் போக்கு உண்டா? காய்ச்சல் தொடர்ந்து அடிக்கிறதா விட்டுவிட்டு வருகிறதா? ஆகியவற்றை யெல்லாம் நோயாளி நுணுக்கமாகக் கவனித்து டாக்டரிடம் சொன்னால் அதற்கு ஏற்ற முறையில் மருந்து கொடுப்பார். நோயும் குணமாகும்.
நோயாளியின் படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். நோயாளி நீண்ட நாள் படுக்கையில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் படுக்கைப் புண் உண்டாகும். ஆகவே நோயாளியை ஒரே நிலையில் படுக்கவைக்காமல் பக்கவாட்டில் மாற்றிமாற்றிப் படுக்கவைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள உதவியாளர்கள் நோயாளிக்குப் பலவகையில் உதவி செய்ய வேண்டும்.
நோயாளி நினைவிழந்த நிலையில் இருந்தால் வாய் வழியாக எதையும் கொடுக்கக் கூடாது. நோயாளிக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் அது குடல்வால் நோயாகவும் இருக்கலாம். உடனே நோயாளியை டாக்டரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
நோய் குணமாக நோயாளி டாக்டருடன் ஒத்துழைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களும் நோயாளியின் நிலை அறிந்து டாக்டரிடம் எடுத்துச் சொல்லி தோயை விரைவில் விரட்ட வேண்டும்.
Comments
Post a Comment