டானிக் என்பது ஒரு கிரேக்கச் சொல். தொடர்ந்து திசுக்களுக்குச் சத்துமூலம் சக்தி அளிக்கும் ஒருபொருள் இது.
மனிதன் உயிர் வாழப் புரதம், கொழுப்பு. கார்போஹைட்ரேட். மினரல்ஸ் அல்லது தாதுப் பொருள், வைட்டமின்கள், நீர் ஆகிய ஆறு சத்துப் பொருள்களும் தேவை. நாம் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நீர் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால் தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் குறைந்த அளவில் இருந்தால் போதும்.
உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கும்,இயக்கத்திற்கும் வைட்டமின் சத்துக்கள் தேவைப்படுகின்றன். திரவமாக இந்த ஊட்டச் சத்துக்களை மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். இந்தச் சத்துக்களை நம் உடம்பே உற்பத்தி செய்துகொள்ள முடியாது.
நாம் சாப்பிடும் உணவில் எல்லாச் சத்துக்களும் அடங்கி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சத்தை மட்டும் பிரித்துச் சாப்பிடமுடியாது.வைட்டமின் சத்துக்கள் சுமார் 20க்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொரு சத்தும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுத் தனித்தனி மாத்திரைகளாகவோ, திரவப் பொருளாகவோ மாற்றப்பட்டு இரசாயனக் சுலவையாகத் தரப்படுகிறது. இதுவே டானிக்.
வைட்டமின் சத்துக்கள் உணவில் மிகக் குறைந்த அளவில் இருந்தால், நோய்கள் தோன்ற இடமளிக்கின்றன. வைட்டமின் A போதிய அளவில் இல்லாவிட்டால் நம் வளர்ச்சி குறைந்துவிடும். தொற்று நோய்கள் பரவும்.கண் சம்பந்தமான கோளாறுகள் தோன்றும்.
B-வைட்டமின் சத்துக் குறைவினால் நரம்பு சம்பந்தமான கோளாறுகள் வரும். ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யா. அது போல C- வைட்டமின் குறைவினால் தோல், மூட்டுகள் சம்பந்தமான நோய்கள்,எலும்பு, பல் முதலியான பாதிப்புக்கு ஆளாகும். சளித் தொல்லை உண்டாகும். D-வைட்டமின் குறைவால் மார்புக் கூட்டின் வளர்ச்சி குன்றும். ரிக்கட்ஸ் நோய் உண்டாகும்.
E-வைட்டமின்குறைவால் இனப்பெருக்கத்திற்குக் கேடு சூழும்.
இவைதவிர கால்ஷியம். பொட்டாசியம், மெக்னிஷியம் அயோடின், நைட்ரஜன், அம்மோனியம், இரும்பு, கரி ஆகியவை போதுமான அளவு இல்லாவிட் டாலும் பல வகை நோய்கள் நம்மைத் தாக்கும்.
இந்த நோய்களைப் போக்க அல்லது வரவிடாமல் தடுக்க நம் தினசரி உணவில் காய்கறி, கீரை, பால், முட்டை ஆகியவற்றைச் சோர்த்துக் கொள்ளவேண்டும். உணவு வகைகளில் எல்லாச் சத்துக்களும் இருக்கும்போது டானிக் தேவை தானா? டானிக் ஒரு சிலருக்குத் தேவை தான். இதைத் தீர்மானம் செய்யவேண்டியவர் டாக்டர் ஒருவரே.
உதாரணமாக, கர்ப்பமான பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 5 மி.கிராம் பாலிக் ஆஸிட் தேவை. இதைச் சாப்பிடா விட்டால் கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும் என்ற சூழ்நிலை ஏற்ப்படும்போது பாலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிடும்படி டாக்டர் சிபாரிசு செய்கிறார். ஆனால் இதே பாலிக் அமிலச் சத்து முட்டைக்கோஸ், கீரை, வெள்ளரிக்காய்,சோயா பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடுவதன் மூலம் பெறலாம். சில பெண்களுக்கு இவற்றைத் தேடிப் பெற அவகாசமில்லை என்பதால் டாக்டர் டானிக் சாப்பிடும்படி கூறுகிறார்.
நோய் குணமான பிறகு சிலர் ஏதாவது டானிக் சாப்பிட்டால் நல்லது என்று நினைக்கிறார்கள். நோயினால் இழந்த பலத்தை டானிக்குகளால் மீட்டு ஆரோக்கியத்தைப் பெறலாம் என்பது இவர்கள் நினைப்பு. நோயிலிருந்து விடுபட்டவர்கள் உணவில் சத்தான பொருட்களைச் சேர்த்துக் கொள்வதுதான் இயற்கைக்குச் சரிப்பட்டுவரும்.
செயற்கை முறையில் ஊட்டச் சத்தைப் பெறுவது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. மேலும், உடலுக்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்று அறிந்து செயல் படவேண்டும்.ஒரே டானிக்கில் பல வகைச் சத்துக்கள் அடங்கி இருக்கலாம். ஆனால் தேவைப் படுவதை மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இன்னும் சிலர், சோகை நோய்க்கு உடம்பில் இரும்புச்சத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காக அயர்ன் சாப்பிடுகிறார்கள். அதையும் அளவுக்கு மீறிச் சாப்பிடுகிறார்கள். இதன் பின் விளைவு? வேறு சில கோளாறுகள்! ஒரு சில டானிக்குகளைத் தவிர மற்றவை பயன் ஏதும் தருவதில்லை. அவை வண்ணத் தண்ணீர்களே!
உடம்புக்கு அயர்வு, சோர்வு, களைப்புத் தோன்றும் போது டானிக் தெம்பை அளிக்கிறது என்று கற்பனை செய்துக்கொண்டு ஏதாவது ஒரு விளம்பரத்தில் வந்த டானிக் கை சாப்பிடுகிறார்கள். இதனாலும் ஆபத்து உண்டாகிறது. சோர்வுக்குக் காரணத்தைக் கண்டுபிடித்து அதைப் போக்க மருந்து சாப்பிடவேண்டும். அதை விட்டுவிட்டு டானிக் சாப்பிடுவது நன்மை தராது.
Comments
Post a Comment