பள்ளிக்கூடங்கள் நோய்களின் உற்பத்தி ஸ்தானங்கள் அல்ல. ஆனால் நோய்கள் பரவும் இடங்களுள் ஒன்று என்பதை மறுக்க முடியாது. பள்ளிப்பருவ இளம் சிறார்களுக்கு நோய் தொற்றும் இடங்களுள் பள்ளிக் கூடங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
இன்றையப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவர்களும், மாணவிகளும் நாளைக்கு நாட்டின் குடி மக்களாகவும், குடும்பத் தலைவராகவும், நாடாளும் தலைவர்களாகவும் வளர்ந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்கள். இவர்களின் உடல்நலமும், மனநலமும் வளர அரசும் பெற்றோரும், ஆசிரியர்களும் செயல்படவேண்டும்.
பள்ளிப் பருவத்திலே வரும் நோய்கள் பல. கண் நோய்கள், பல் நோய்கள், காது மூக்குத் தொண்டை நோய்கள், தோல் சம்பந்தமான நோய்கள், ஊட்டச் சத்துக் குறைகளால் ஏற்படும் நோய்கள் இப்படிப் பல வாறாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.
இவற்றுள் பெரியம்மை, காலரா, டைபாய்டு, இளம் பிள்ளை வாதம் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பான் நோய், வலிப்பு நோய்கள் ஆகியவை ஆபத்தையும் கொடுக்கும்.
பள்ளிக்கூடத்தில் ஏற்படும் நோய்கள் |
இதனால் இந்த நோய்கள் தோன்றும் போது வீட்டில் பெற்றோர் மிகவும் கவனமாக அக்கறை எடுத்துக் கொண்டு உடனே சிகிச்சை செய்ய வேண்டும். நோய் உள்ள பிள்ளைகளைத் தனிமைப்படுத்திக் குணம் ஆகும் வரையில் வீட்டிலேயே வைத்துச் சிகிச்சை செய்து கொண்டு பின்னரே பள்ளிக் கூடத்திற்கு அனுப்பவேண்டும்.
நோயோடு பள்ளிக் கூடத்திற்கு அனுப்புவதால் இந்த நோய் மற்ற குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டு பரவும். இதைப் பெற்றோர் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்களும் நோய்வாய்ப் பட்ட குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் பழக விடாமல் பெற்றோருக்குச் சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். வைத்தியச் சிகிச்சைக்கும் சிபாரிசு செய்ய வேண்டும்.
கிருமிகளின் காரணமாக நோய் பரவுவதால் நோய்த் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளவேண்டும் காலராத் தடுப்பு ஊசி, டைபாய்டு தடுப்பு ஊசி இவைகளைப் போட்டுக் கொள்ளப் பெற்றோர் ஏற்பாடு செய்யவேண்டும். தடுப்பு ஊசிகள் மூலம் தொற்று நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கலாம்.
பெரியம்மை நோய் ஒரு தொற்று நோய், கடுமையான ஜூரம் வரும். கை கால் முதுகுப் பகுதியில் வலி ஏற்படும். அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். அம்மை நோய்த் தடுப்பு ஊசிகளை ஆரம்பத்திலேயே போட்டுக் கொண்டால் ஐந்து வருடங்கள் வரை இதனால் பாதிப்பு ஏற்படாது.
சின்னம்மை நோயும் ஒரு தொற்று நோய். இதனால் காது நோயும் நுரையீரல் நோயும் தோன்றும். அதிக கவனம் தேவை.
சளியில் ஆரம்பிக்கும். ஜூரம் அடிக்கும். இரண்டு வயது முதல் ஏழு வயதுவரை இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கும் உடனே கவனித்தால் குணம் ஆகும்.
குழந்தைகளைச் சிறிவயதிலும் டி.பி. தாக்கலாம். மூளைக் காய்ச்சலும் உண்டாகும். கவனக் குறைவாக இருந்தால் இந்த நோய் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கும். சளிதானே, ஜூரம் தானே இது என்ன செய்து விடும் என்று அசட்டையாக இருக்காமல் உடனடிச் சிகிச்சை செய்துகொண்டால் வரப்போகும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தலாம்.
டான்சில்ஸ் என்று சொல்லப்படும் உள்நாக்கு வளர்ச்சி யினால் சில குழந்தைகளுக்கு இருமல், ஜூரம் உண்டாகித் தொல்லை தரும்.
இது போல அடினாயிட்ஸ் நோய் வந்தால் மூக்கில் சுவாசிக்க முடியாமல் வாயினால் சுவாசிக்கும் சிரமம் உண்டாகும். டாக்டரிடம் காட்டி ஆப்ரேஷன் தேவைப் பட்டால் செய்ய வேண்டும்.
பொன்னுக்குவீங்கி என்ற தொற்று நோயினாலும் குழந்தைகளுக்குப் பள்ளிப் பருவத்தில் தொல்லைகள் உண்டாகும். காதிற்குக் கீழ் வீக்கம், வலி உண்டாகும். தலை வலிக்கும். குளிர் ஜூரம் அடிக்கும். இதுதவிர குடல் பூச்சிகளால் சில உபத்திரவம் உண்டாகும்.
நாக்குப் பூச்சி, கொக்கிப்புழு இவற்றால் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். முகம் வெளுக்கும். பசி எடுக்காது. உடல் இளைக்கும். வாந்தி, வயிற்றோட்டம் ஏற்படும்.
குழந்தைகள் சுத்தமில்லாத பள்ளிப் புழுதியில் விளையாடுவதாலும் பள்ளிக் கூட வாசலில் விற்கும் அசுத்தமான, சுகாதாரக் குறைவான தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடு வதாலும் இம் மாதிரிப் பூச்சி, புழு உபத்திரவங்களுக்கு ஆளாகிறார்கள்.
இது தவிர ஊட்டச்சத்துக் குறைவினால் மாலைக்கண், எலும்புருக்கி நோய், ரிக்கெட்ஸ், குடல்புண், சோகை நோய்களாலும், மற்றும் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களாலும், இதர நோய்களாலும் பள்ளிப் பிள்ளைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.
பள்ளிப் பருவத்தில் சிலருக்கு இருத நோய்களும் உண்டாகின்றன.
பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி விளையாடுவதால் பள்ளிக்கூடங்களில் படிக்கும் காலத்தில் குழந்தைகளிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து அவர்களுக்கு உண்டாகும் நோய்களை உடனுக்குடன் கவனிக்க வேண்டும்.
Comments
Post a Comment