குழந்தைகளைப் பாதிக்கும் எத்தனையோ தொந்தரவுகளில் Bed wetting என்று சொல்லப்படும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தொந்தரவும் ஒன்று.
சாதரணமாக குழந்தைகள் இரண்டு வயது முதல் நான்கு வயதிற்குள் சிறுநீர் மற்றும் மலத்தைக் கட்டுப் படுத்தும் சக்தியைப் பெற்று விடுகிறார்கள். ஆனால் ஒருசில குழந்தைகள் சில நேரங்களில் தங்களைக் கட்டுப் படுத்த முடியாமல் படுக்கையில் சிறுநீர், கழித்துவிடுகிறார்கள். இது பெற்றோருக்குத் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்திவிடுகின்றன.
பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா? அதைப் பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா? என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். பேணி வளர்ப்பதில் குழந்தைக்கு "டாய்லட் டிரைனிங்" என்று சொல்லப்படும் சிறுநீர், மலம் கழிக்கும் பயிற்சியும் ஒன்று. குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகளுக்கு மலம் சிறுநீர் கழக்கும் பழக்கத்திற்குத் தாய்தான் உதவ வேண்டும்.
பொதுவாக இடுப்புக் கீழே உள்ள உறுப்புக்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதில்லை. வயிறு, குடல், சிறுநீரகம் இவை எல்லாம் பழக்கத்திற்கு அடிமையான உறுப்புக்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும்படி பழக்கப் படுத்தினால் அந்தப் பழக்கத்திற்கு இந்த உறுப்பிக்கள் அடிபணியும். பழக்கத்தை மாற்றினால் அவை தாமாகவே மாறிக் கொள்ளும்.
இப்படி ஒரு கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளாமல் சில குழந்தைகள் தவறு செய்துவிடுகிறார்கள். சிலர் எட்டு வயது, பத்து வயது ஆனபிறகும் படுக்கையில் சிறுநீர் கழித்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம்? இது ஒரு நோயா? அல்லது வேண்டுமென்றே செய்கிறார்களா? என்பதை எல்லாத் தாய்மார்களும் தெரிந்து கொள்வது அவசியம்.
நேரங்கெட்ட நேரத்தில் சிறுநீர் கழிப்பதற்குக் காரணம் பிறவிக் கோளாறாக இருக்கலாம். சிறுநீரில் கிருமிகள் தொற்று காரணமாக இருக்கலாம். குடலில் பூச்சித் தொல்லை இருக்கலாம். இரத்தக் குறையும் பலமின்மையும் காரணமாக இருக்கலாம்.
சிறுநீரக உறுப்புக்களில் நோய் என்பது அபூர்வமாக ஒன்றிரண்டு குழந்தைகளுக்கு ஏற்படலாம். சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொந்தரவு இருந்தாலும் குழந்தை மருத்துவர்களிடம் காட்டி என்ன குறை என்று அறிந்து அதற்குச் சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.
குழந்தைகள் ஏன் படுக்கையில் சிறுநீர் கழிக்கிறார்கள்?
உறுப்புக் கோளாறு, கிருமித் தொல்லை உள்ள குழந்தைகள் இரவில் மட்டுமல்ல, பகலிலும் தூங்கும் போது இதே தவறைச் செய்துவிடுகிறார்கள். இதனால் இதற்கு வைத்திய சிகிச்சை மிகமிக முக்கியம்.
சிறுவர்கள்தாம் இதில் அதிகமான தொந்தரவுக்கு ஆளாகிறார்கள் என்று குழந்தை மருத்துவர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
வீட்டில் பெற்றோரிடம் பயம். பள்ளியில் ஆசிரியர்களிடம் பயம். நெருங்கிப் பழகும் விளையாட்டுத் தோழர்களிடம் அச்சம் ஆகியவற்றால் மன உணர்வுகள் பாதிக்கப்படுகிறார்கள். படிப்பில் திறமையற்றவர்களாய், விளையாட்டுப் போட்டிகளில் துணிவற்றவர்களாய் இருக்கும் சிறுவர்கள்தாம் பெரும்பாலும் இக்குறைபாடுகள் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.
மூன்று வயது சிறுவர், சிறுமிகள் இரவில் போதுமான அளவு உண்ணாமல் தூங்கி விடுகிறார்கள். பற்றாக் குறை உணவால் சில குழந்தைகள் இரவில் சிறுநீர் கழிக்கிறார்கள். தூக்கத்தில் தங்களையும் அறியாமல் இந்தத் தவறைச் செய்துவிடுகிறார்கள்.
குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுப்பது எப்படி?
புதிய இடங்களில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளை ஒரு கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர மிரட்டியோ. அடித்தோ, பயமுறுத்தியோ பணிய வைக்கச் செய்கிறார்கள். இதனால் எதிர்மாறான விளைவுகள் ஏற்படுகின்றன. இது தவறான அணுகு முறை, குழந்தை படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால் அன்பாய், " இதுபோல செய்யாதே என்று இதமாய்ச் சொல்லவேண்டும். இந்தக் கெட்ட பழக்கத்தை நிறுத்தினால் உனக்குப் பரிசு கொடுப்பேன். நீ விரும்பியதை வாங்கிக் கொடுப்போம்" என்று பெற்றோர் ஆறுதலாக, அரவணைப்போடு சொல்லித் திருத்த வேண்டும்.
மற்றவர்கள் முன் அவர்களது செயலை எடுத்துச் சொல்லி அவமானப்படுத்தக்கூடாது. மனம் நோகாதபடி இந்தப் பழக்கத்தை நிறுத்திவிடமுடியும் என மனோதத்துவ நிபுணர்கள் யோசனை கூறுகிறார்கள்.
தவறு செய்யும் குழந்தைகளை இரவு படுக்கப்போகுமுன் சிறுநீர் கழிக்கும்படி செய்துவிட்டுப் படுக்கச் செல்லும் பழக்கத்தை உண்டாக்கவேண்டும். சிறுநீர் கழிக்காமல் இருக்கும் நாட்களில் அவர்களைப் பாராட்டவேண்டும். பரிசு கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும்.
சிறுவர்களுக்குச் சில உணவுக் கட்டுப்பாடுகளை கொண்டுவரலாம்.நீர்ச் சத்து அதிகம் உள்ள காய்கறிகளை மாலை அல்லது இரவு வேளைகளில் உணவில் கலந்து கொடுக்கக்கூடாது. தண்ணீர் அதிக அளவில் மாலை, இரவு வேளைகளில் குடிக்கக் கொடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
படுக்கையில் சிறுநீர் கழிக்காமல் இருக்க குழந்தை களுக்குச் சில மருந்துகள் கொடுக்கலாம். குழந்தை மருத்துவர்கள் மட்டுமே இந்த மருந்துகளைச் சிபாரிசு செய்ய வேண்டும். காரணம் சிறுநீரகம் மிகவும் நுட்பமானது.
கண்ட மருந்துகளைக் கொடுத்துச் சிறுநீர் வெளி வருவதைத் தடை செய்யக்கூடாது. இதனால் பின் விளைவுகளை குழந்தைகள் அனுபவிக்கும்படி நேரிடும்.
பழக்கங்களை மாற்றப் பெற்றோர் பண்போடு நடந்து கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment