குழந்தைகளுக்குச் சில சமயங்களில் சளி பிடித்துக் கொள்கிறது. நெஞ்சில் சளி, இருமல், இருமித்துப்பும் போது இரத்தம் விழுகிறது. இதற்கு என்ன காரணம்?
சில குழந்தைகளுக்கு ஜூரம் வருகிறது, அதோடு வலிப்பும் உண்டாகிறது. இதற்கு என்ன காரணம்? சில குழந்தைகளுக்கு முகம் வெளுந்து, வயிறு பெருத்து, கன்னங்கள் ஊதிப் போய் இருக்கும். இதற்குக் காரணம்?
சில குழந்தைகளுக்கு வயிற்றுவலி, பேதி ஆகிறது. விஷக் கிருமிகளால் பேதி ஆகிறது. இதற்கு என்ன காரணம்?
குழந்தைகள் நன்றாகச் சாப்பிடுகின்றன. ஆனால் உடம்பு தேறவில்லை. தேய்ந்து தேய்ந்து தேவாங்குகள் போல் ஆகிவிடுகின்றன. குழந்தைகள் சாப்பிடும் சாப்பாடு எல்லாம் எங்கே போகிறது? எல்லாவற்றிற்கும் காரணம் குடற் பூச்சிகள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இவை எல்லாம் உண்மைதானா? உண்மைதான்! இந்தப் புழுக்களால் குழந்தைகளுக்கு வரும் நோய்கள் அநேகம். மறைமுகமாகக் குடலில் போய் தங்கிக் கொண்டு குழந்தைகளையும் சில சமயங்களில் பெரியவர்களையும் தொல்லைப் படுத்துகின்றன.
இந்தப் புழுக்கள் சில உருண்டை வடிவமாகவும், இன்னும் சில இலை போல் தட்டையாகவும் இருக்கின்றன. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் இவற்றினுள் ஆண்,பெண் பிரிவுகள் கிடையாது. ஒரே புழு ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறது. இந்தப் புழுக்களை -Round Worm - (நாக்குப் புழு). Hook Worm (கொக்கிப் புழு), Thread Worm- (நூல் புழூ அல்லது கீரைப் புழு) என்று மூன்று பெரிய பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.
இதில்நூல் போல் தோற்றமளிக்கும் கீரைப் புழுவைப் பற்றி இங்கு பார்ப்போம்.
கீரைப் புழுக்களில் மட்டும் ஆண், பெண் என்று ஜாதி உண்டு. பெருங்குடல் பகுதியின் ஆரம்பத்தில் இந்தப் புழுக்கள் தங்குமிடமாகக் கொண்டு வாழ்கின்றன. இரவு நேரங்களில் ஆசனப் பகுதியில் வந்து முட்டையிடுகின்றன. இரவு குழந்தைகள் தூங்கும் நேரத்தில் ஆசனப் பகுதியில் அலைவதால் நமைச்சல் எடுக்கிறது.
பெண் குழந்தைகளின் ஆசன வாய்க்கு அருகில் சிறு நீர்ப் பாதை இருப்பதால் புழுக்கள் அங்குபோய்ச் சுரண்டுகின்றன. இதனால் சிறுமிகள் இரவில் சிறுநீர் கழித்து விடுகிறார்கள். இதனை அறியாத பெற்றோர் சிறுமிகளை அடித்து விடுகிறார்கள்.
பிப்பிராசின் என்றும் பைரினியம் பாமோட் ஆகிய மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி அளவோடு கொடுக்கவேண்டும். ஆசனவாயில் தடவுதற்காக எல்லோ மெர்குரி ஆயின்ட்மென்ட் உள்ளது.
இவை தவிர, சில தற்காப்பு முறைகளைப் பெற்றோர் செய்ய வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டிவிட வேண்டும். மலம் கழித்த பிறகு ஆசனப் பகுதியை சுத்தமாகக் கழுவிக்கொள்ளச் சொல்லவேண்டும். குழந்தைகளின் கைகளை அடிக்கடி டெட்டால் விட்டுக் கழுவ வேண்டும். சோப்புப் போட்டுக் கழுவினாலும் போதும்.
குழந்தைகளைப் படுக்கச் செல்லும்போது ஜட்டி. டிராயர் முதலியனவற்றை உடுத்திப் படுக்க வைக்க வேண்டும். அந்தத் துணிகளை வெந்நீரில் நனைத்துப்பிறகு துவைக்க வேண்டும். அசுத்தமான பகுதிகளில் குழந்தைகள் நடமாடுவதால் காலில் செருப்பு அணியும் பழக்கத்தை வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும் கால்களை, விரல்களைச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாகக் கைகளைச் சுத்தம் செய்த பிறகே தின்பண்டம். உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும்.
பூச்சித் தொல்லைகளிலிருந்து விடுபடக் குழந்தைகளுக்கு அன்னாசிப் பழங்கள், பப்பாளிப் பழங்களைச் சாப்பிடத் தூண்டவேண்டும். பூச்சிகளை விரட்டவேப்பங் கொழுந்துத் துவையல், சுண்டைக்காய் வற்றல், பாகற்காய்ப் பொரியல் முதலிய சுசப்புச் சுவை உணவுகளைச் சாப்பிட்டுப் பழக முயற்சி செய்யவேண்டும்.
புழுக்களால் குழந்தைகளுக்குத் தொந்தரவு அதிகம் ஏற்படுவதால் சுத்தமும், கண்காணிப்பும் மிக மிகத் தேவை! குழந்தைகள் வளருங் குருத்துக்கள். ஆகவே அவர்களைக் குடற்புழுக்கள் பாதித்துவிடாதபடி பாது காக்க வேண்டியது. பெற்றோர் கடன்!
Comments
Post a Comment