குழந்தைகள் சிரிக்கும்போது முகத்திற்தகு அழகு தருபவை அழகிய பற்கள். இந்தப் பற்களில் சொத்தை விழுந்துவிட்டால் அழகின் சிரிப்பே பறந்துவிடும். எனவே குழந்தைப் பருவத்தில் பற்களைப் பழுதுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புட்டிப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பாலில் இனிப்புக்காகச் சர்க்கரையை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரையானது பல்லில் சில விளைவுகளை உண்டாக்குகிறது. ஊட்டச் சத்து என்ற பெயரில் மாவு சேர்க்கப்படுவதால் இந்த மாவு பல் பகுதியில் படிகிறது.
கிருமிகள் சர்க்கரையையும், மாவுப் பண்டங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவற்றை அமிலமாக மாற்றுகின்றன. இந்த அமிலம் வளரும் பற்களின் எனாமலை அரிக்கிறது.
பற்களில் புள்ளிகளை உண்டாக்கி அந்தப் புள்ளிகள் மூலம் துளை விழுந்து கிருமிகள் பற்களின் வேர்ப் பகுதிவரை சென்று கட்டியை உண்டாக்குகிறது. அதிலிருந்து சீழ் உண்டாகிறது.
கிருமிகள் உற்பத்தி செய்யும் நச்சு நீரும் பற்களை அரித்துச் சேதப்படுத்திவிடுகிறது. கிருமிகள் உற்பத்தி செய்யும் என்சைம் என்ற சுரப்பு நீர்தான் பற்களின் எனாமல் அழிவதற்கு காரணம்.
குழந்தைகள் மிட்டாய், ரொட்டி, ஐஸ்கிரீம் ஆகிய தின்பண்டங்களை அதிகமாக விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இது குழந்தைப் பருவத்தில் இயற்கை. ஆனால் இனிப்பும், மாவும் பல் இடுக்குகளில் புகுந்துகொண்டு தங்கிவிடுகின்றன. கிருமிகளுக்கு இது வசதியாக இருக்கிறது.
பற்களின் மேல்பரப்பில் ஒரு மெல்லிய படலம் படர்கிறது. இதுவும் கிருமிகளால் உண்டாகிறது. இதனால் பற்களில் குழி விழுகிறது. இந்தக் குழிகளில் கிருமிகள் தங்கிப் பலவிதத் தொல்லைகள் கொடுத்துப் பற்களை சொத்தையாக்கிவிடுகின்றன.
பல் சொத்தை விழுவதற்குப் பலவிதக் கிருமிகள் காரணம் என்று சொல்லுகிறார்கள். லேக்டோபேசிலஸ் என்ற கிருமியே இதில் முக்கியத் தலைமை வகிக்கிறது. இந்தக் கிருமிகள் இனிப்புப் பொருள்களைச் சாப்பிடுவதால் வருகின்றன.
சொத்தைப் பல் என்பதற்கு அடையாளங்களாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம். ஆரம்பத்தில் பற்களின் மேற்பரப்பில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் புள்ளிகள் உண்டாகும். குழி உண்டாகும். பிறகு கறுப்பாக நிறம் மாறும்.
கிருமிகள் பற்களின் உறுப்புக்களில் புகுந்து வேர்ப் பகுதியைத் தாக்கும். கட்டி உண்டாகும். சீழ் பிடிக்கும். பல் வலி ஆரம்பிக்கும். உணவுப் பொருளைக் கடிக்க முடியாது. இவைதாம் சொத்தைப் பல்லின் அறிகுறிகள்.
சொத்தைப் பல்லைக் சுவனிக்காமல் விட்டுவிட்டால் பல் சிதைந்து பல்லை எடுக்கும் நிலை உண்டாகும். அது மட்டுமா?அது அடுத்த பல்லைத் தாக்கும். அங்கிருந்து அடுத்த பல்லுக்கும் தாவும். பிறகு பாதிக்கப்பட்ட எல்லாப் பற்களையும் எடுக்கும் நிலை உண்டாகும்.
இதற்கு என்ன மருத்துவம் தரப்படுகிறது?
பல்லின் மேற்பரப்பில் சோடியம் மருந்தை டாக்டர் தடவுவார். அமிலம் சுரப்பது குறையும்.
புளூரின் மருந்தைக் கொப்பளிக்கச் செய்வார். இலட்சத்தில் ஒரு பங்கு அளவு புளூரின் காப்சூல் கொடுக்கிறார்கள். பாலுடன் புளூரின் மருந்தைக் கொடுக்கிறார்கள்.
சோடியம் புளூரைட் மருந்தையும் பல்லின் மீது தடவுகிறார்கள்.கொடுத்து வாயைக் சொத்தைப் பல் வராமல் தடுக்க முடியுமா? முடியும் நம் சாப்பாட்டில் வைட்டமின் -D, வைட்டமின் -C, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகியவற்றைச் சேர்த்துக்கொண்டு வந்தால் பல்லில் சொத்தை வராது.
இனிப்புப் பண்டங்களையும் மாவுப் பண்டங்களையும் சாப்பிடுவதைக் குறைக்கவேண்டும். சாப்பிட்டாலும் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். தினசரி பற்களை நன்றாக பிரஷ் மூலம் சுத்தம் செய்யவேண்டும். புளூரைடு கலந்த பற்பசைகளை உபயோகிக்கவேண்டும்.
குழந்தைகளுக்குப் பல் சுத்தம் மிகமிகத் தேவை. பெரியவர்கள் தாய்மார்கள் குழந்தைகளைப் பல்லைச் சுத்தமாகத் தேய்க்கத் தூண்ட வேண்டும், உதவவேண்டும். கவனிக்காமல் விட்டுவிட்டால் தொல்லைகள் பெருகும்!
Comments
Post a Comment