குளத்து நீரில் அசுத்தங்கள் தேங்கி நிற்கின்றன. ஆனால் ஆற்று நீரில் அசுத்தங்கள் தேங்குவதில்லை, எப்போதும் ஓடிக் கொண்டிருப்பதால் அசுத்தங்கள் நிற்பதில்லை.
மேலும் ஓடும் நீரில் பிராண வாயு கலந்திருக்கும். அசுத்த நீரில் கரியமில வாயு கலந்திருக்கும்.
இதுபோலவே இரத்தம் ஓடிக் கொண்டிருந்தால் அதில் அழுக்குச் சேர்வதில்லை. ஒதுங்கிவிடுகிறது. இரத்தம் ஓடிக் கொண்டிருப்பதால் அதில் பிராண வாயும் கலந்து ஓடுகிறது. கரியமில வாயு ஒதுக்கப் படுகிறது.
இரத்தத்தை ஓட வைப்பது நம்முடைய உழைப்பு. குறிப்பாகச் சொன்னால் கைகளை வீசி நடக்கும் நடையே நம் இரத்தத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நன்கு ஓடச் செய்கிறது. உடல் உறுப்புக்களில், இரத்த நாளங்களில் இரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடுவதற்கு நடை மிகமிக அவசியமாகத் தேவைப் படுகிறது.
தத்தித்தத்திச் செல்லும் சிறு குழந்தைக்கு மூன்று சக்கரத் தள்ளு வண்டியைக் கொடுத்து நடைபயில விடுகிறார்கள். இல்லா விட்டால் குழந்தை சப்பாணியாகி விடும்.
இடுப்புக்குக் கீழே உள்ள தசைகளை, நரம்புகளை இயக்கி விட வேண்டும். அப்போது தான் கீழ்ப் பகுதிக்கு வந்த அசுத்த இரத்தம் நடக்கும்போது மேல் நோக்கித் தள்ளி விடப்படும்.
அசுத்த இரத்தம் மேல் நோக்கி இருதயம், நுரையீரல்களுக்குச் செலுத்தப்பட்டு, அங்கு சுத்திகரிக்கப்பட்டு பிறகு உடலெங்கும் ஓட வழி வகுக்கப்படும். மார்புக்கும் வயிற்றிற்கும் இடையிலுள்ள விதானத் தசை, வயிற்றிலுள்ள தசை, கால்களிலுள்ள தசை ஆகிய மூன்று தொகுதித் தசைகளும் நடக்கும்போது சுருங்கி விரிவதால் இரத்தம் மேல் நோக்கி உந்தப்பட்டு ஆக்ஸிஜினைப் பெறுகிறது என்று உடற்கூறு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
நாம் உட்கார்ந்திருக்கும்போது இரத்த ஓட்டம் மந்தமடை கிறது.
எழுந்து நடமாடும் போது இரத்த ஓட்டம் துரிதமடைகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்தே இருந்தவர்களுக்கு உடனே எழுந்து நடக்க முடியாமல் கிராம்ப் என்று சொல்லப்படும் தற்காளிக வாதம் கால்களைச் சிறிது நேரம் பிடித்து இழுத்துக் கொள்வதைக் கவனித்திருக்கலாம்.
நம்முடைய உடம்பில் சுமார் 600க்கு மேற்பட்ட தசைகள் நரம்புகளோடு பின்னிப் பிணைந்து உறுப்புக் களோடு பற்றி நிற்கின்றன.
இந்தத் தசைகளுக்கு வேலை கொடுக்காவிட்டால் வலுவற்றுப் போகும். கால்களைப் பூமியில ஊன்றி எழுந்து நிற்கவும், கைகளை அசைக்கவும், கால்கள் நடக்கவும் ஆகிய ஒவ்வோர் அசைவிற்கும் சுமார் 150 தசைகள் நமக்கு உதவி செய்கின்றன.
உடலிலுள்ள தசைகள் சீராகச் செயல்பட முதலில் நாம் நடக்கவேண்டும்.
நாம் கை வீசி நடக்கும்போது உடம்பிலுள்ள தசைகள் எல்லாம் செயல்படுகின்றன. கால் பாதம், கணுக்கால் இணைப்புக்கள், கெண்டைக் கால் தசைகள், தொடை, முழங்கால் மூட்டுக்கள், இடுப்பு இணைப்புக்கள், பிறகு வயிறு, குடல் பகுதி, விதானம், மார்பு, கழுத்து, தலை அத்தனையும் சுறுசுறுப்பாக இயங்குகின்றன.
இதனால் இரத்த ஓட்டம் துரிதமடைகிறது. நரம்பு தசைகளும் சுறுசுறுப்படைகின்றன. மூளைக்கும் வேலை கிடைக்கிறது. நாம் அதிகமான அளவு பிராண சக்தியைப் பெறுகிறோம். சுவாசம் வேகமாக நடக்கிறது. வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகள் அசைகின்றன. நல்ல ஜீரண சக்தி கிடைக்கிறது. உடம்பிலிருந்து வியர்வை வெளியேறுகிறது.
மணிக்கு மூன்று கிலோ மீட்டர் வேகத்தில் நடந்தால் நம் உடம்பில் உயிர்ப் பொருள் இரசாயன மாற்றம் 11/2 மடங்கு நடைபெற்று நமக்குச் சக்தியளிக்கிறது.
இதனால் உடம்பிலுள்ள மிகுதியான கொழுப்பு எரிக்கப்படுகிறது. இரத்தக் குழாய்கள் விரிந்து சுருங்குவதால் இரத்தக் குழாய் பற்றிய நோய்கள் அண்டா. டிஸ்பெப்ஸியா, இன்சோம்னியா ஆகிய நோய்கள் நம்மைத் தீண்டா.
பிளட்பிரஷர், இருதய நோய், பசியின்மை, தூக்க மின்மை, செரிமானம் இல்லாமை எல்லாமே பறந்து விடுகின்றன. மலச்சிக்கல் ஒழிந்து போகிறது. மூட்டு நோய்கள் குறைந்து விடுகின்றன.
உடல் பருமனானவர்கள் தினசரி ஒரு மைல் அல்லது இரண்டு மைல் நடந்தால் ஊளைச் சதை கரைந்து விடும். வயதானவர்கள் குறைந்த அளவு காலையிலும் மாலையிலும் காலாற நடந்து வந்தால் இரவில் நல்ல தூக்கம் உண்டாகும். காலைக் கடன்களைச் செய்யச் சிரமம் இருக்காது.
பெண்களில் கர்ப்பமானவர்கள் உணவுக்குப் பிறகு மெதுவாக நடந்து பயிற்சி கொடுப்பதால் இறுக்கம் குறைந்து சுகப் பிரசவம் ஏற்பட வழி வகுக்கும்.
நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள மருந்துகளைவிட எளிய உடற்பயிற்சிகளும், நடைப்பயிற்சிகளும் உறுதுணையாக இருக்கும்.
இரவு உணவு சாப்பிட்ட பிறகு சிறிது தூரம் நடந்துவிட்டு வந்து படுத்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
மனிதன் நீண்ட காலம் வாழ நல்ல பசியும், நல்லீ தூக்கமும் வேண்டும். இந்த இரண்டும் நடை மூலம் கிடைக்கின்றன.
Comments
Post a Comment