தோல் என்பது நமது உடம்பு முழுவதற்குமான போர்வை போன்றது. இந்தப் போர்வையில் பத்தொன்பது இலட்சத்திற்கும் அதிகமான வியர்வைக் குழாய்கள் இருக்கின்றன. இந்த வியர்வைக் குழாய்களை நீட்டிவைத்துக் கணக்குப் போட்டால் சுமார் எட்டு மைல் நீளம் இருக்கும் என்று உடல் கூறு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
இந்த வியர்வைக் குழாய்கள் மூலம் நம் உடலிலுள்ள கழிவுப் பொருள்கள் வெளியேறுகின்றன. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்தத் தோலில் நரம்புகள், திசுக்கள். வியர்வைக் குழாய்கள் எல்லாமே அடங்கி இருப்பதால் தோலுக்கு ஏதாவது கிருமிகளால் தொந்தரவுகள் ஏற்பட்டால் தோல் சம்பந்தமான பலவித நோய்கள் உண்டாகின்றன.
தோலுக்கு வரும் நோய்கள் பல. இதில் சொறி, சிரங்கு, தேமல், கிரந்தி, மேக நோய், கரப்பான். படர்தாமரை, மதுமேகம், கட்டி, பரு, சேற்றுப்புண், படை என்று பலவகைப் பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.
தோல் நோய்களில் அதிகமான அளவு தொந்தரவு கொடுப்பது எக்ஸிமா என்ற படை நோய். படை நோய்களிலும் பல வகைகள் உண்டு. இந்தப் படையை உண்டாக்கும் கிருமிகளை மைக்ரோஸ் போரன், என்றும் எபிடர்மைபியாடன் என்றும் அழைக்கிறார்கள்.
இந்த நோய், தோலின் மேல் புறத்தில் கடுகு போன்ற சிறுசிறு கொப்புளங்களாக ஓரிடத்தில் தோன்றும். அது உடைந்து அந்த இடத்தில் வட்டமாகப் பரவும். அரிப்பு எடுக்கும். சொறியத் தோன்றும் சொறியும்போது கிருமிகள் நகத்தில் ஒட்டிக்கொள்ளும், எந்தெந்தப் பொருள்களைத் தொடுகிறோமோ அந்தப் பொருள்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்றும். உடைகள், படுக்கை விரிப்புக்கள், துண்டுகள், சீப்பு மற்றும் பல பொருள்களில் ஒட்டிக்கொண்டு யார்யார் இவற்றைப் பயன்படுத்து கிறார்களோ அவர்களுக்கெல்லாம் மறைமுகமாகப் பரவும். இது காளான் வகையைச் சேர்ந்த கிருமிகளால் உண்டாவது. குளிர்ச்சியான, ஈரமான இடங்களில் இந்தக் கிருமிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.
படை நோய் எல்லா இடங்களிலும் படையெடுக்கும். தசைகளில் குறிப்பாக மடிப்பு விழுந்த தசைகளில், நகத்தில் முடியில், தலையில், தாடையில், தொடை இடுக்குகள் எல்லாம் இந்தக் கிருமிப் படை வட்ட வட்டமாக நகர்ந்து கொண்டே இருக்கும். அந்தந்த இடங்களுக்கு ஏற்ப இந்தப் படைகளுக்குப் பெயர்கள் உண்டு.
உதாரணமாக, தாடி மீசைப்பகுதிகளில் இந்தப் படை தோன்றும். இதை ஆங்கிலேயர்கள் Barber's nash என்பார்கள். பலர் முடிவெட்டிக் கொள்ள-சவரம் செய்து கொள்ளப் போகிறார்கள்.
படை போன்ற சரும் நோயாளிகளுக்குப் பயன்படுத்துப்படும் அதே கத்திரிக் கோல், கத்தி, முகச் சவரத்திற்கு உபயோகிக்கும் பிரஷ் ஆகிய கருவிகளில் இந்தக் கிருமிகள் ஒட்டிக் கொண்டு மற்றவருக்குத் தொற்றிக் கொள்ளும். இதுதான் மேற்கண்ட பெயரைப் பெறுகிறது.
சலவைத் துணிகள் மூலமாகவும் இந்தப் படை நோய் பரவும். சரும நோய்உள்ள ஒரு நோயாளியின் துணியோடு நம்முடைய துணிகளை வைத்துச் சுருட்டுப்போதும். துவைக்கும்போதும், அடுக்கும்போதும் இந்த நோய் பரவும். இதை டோபீஸ் இட்ச் என்று சொல்லுகிறார்கள்.
இது தவிர, பொதுக் கழிப்பிடங்கள் மூலமும் இந்தப் படை நோய் பரவுகிறது. மறைவிடம் தொடைப் பகுதியில் இந்த நோய் பற்றிக் கொள்வதால் கழிப்பிடப் படை நோய் என்று பெயர் பெறுகிறது. கிருமிகள் நம் சருமத்தை முதலில் தாக்கி நோய்களைப் பலவிடங்களுக்குப் பரப்புகின்றன.
படை நோய் சாமானியத்தில் சரியாவதில்லை. இதனால் தோல் சிகிச்சை நிபுணர்களிடம் காட்டி மருந்து போடுவது நல்லது. சாதாரணமாக, படை நோயாளிகளுக்கு பெட்னவேட் ஆயின்ட்மென்ட் தடவலாம். இதுபோல எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை வாங்கி உபயோகிப்பதால் நோய் சீக்கிரம் குணம் ஆகும்.
பொதுவாக, டாக்டர்களுக்குக் கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கும் நோய் என்று தோல் நோய்களைப் பற்றி மேலை நாடுகளில் சொல்லுவார்கள். காரணம், புண் ஆறுவது போல் தோன்றும் ஆனால் ஆறாமல் பழையபடி தொந்தரவு கொடுக்கும். டாக்டர்களையும் இது டபாய்க்கும் என்று சிலர் கிண்டலாகச் சொல்லுவார்கள்.
மருந்தைத் தொடர்ந்து போடவேண்டும். நிறுத்தக் கூடாது. அடிக்கடி டாக்டர்களை மாற்றிக்கொண்டே போகக் கூடாது: மருந்துகளையும் மாற்றக்கூடாது.
தமிழ் மருந்துகளில் படை நோய்க்கு ஒரு மருந்து சொல்கிறார்கள். ஒரு சிறுகட்டி நவச்சாரத்தை உடைத்துப் பவுடர் ஆக்கி அதில் தேன் விட்டுக் குழப்பி பீங்கான் பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தினசரி படையின்மீது தடவிவந்தால் படை உதிர்ந்துவிடும்.
சரும நோய்களுக்கு காரணம் முதலில் உடல் சுத்தம் இல்லாதது. தினசரி குளிக்க வேண்டும். அழுக்கைப்போக்க வேண்டும். குளித்த பிறகு உடம்பில் ஈரம் இல்லாமல் நன்கு துடைத்துவிட வேண்டும். தொங்கு சதை உள்ளவர்களுக்கு தசையின் மடிப்புக்களில் ஈரம் தங்கும். இது கேடு பயக்கும்.
உடல் சுத்தத்திற்கு அடுத்தபடி குடல் சுத்தம் வேண்டும். மலச் சிக்கல் காரணமாக உடம்பில் தேங்கியிருக்கும் கழிவுகள், நச்சுக்கள் சருமத்தின் வழியாக வெளியேறும். சருமம் சுத்தமில்லாவிட்டால் கழிவுகளால் அழற்சி ஏற்படலாம். ஆகவே கை, கால், உடல், உடை இவை சுத்தமாக இருந்தால் தோல் நோய்கள் தொலை தூரத்திற்கு ஓடிவிடும்.
நல்ல காற்றும், நல்ல வெளிச்சமும், சூரியக்கதிர்களும் நம்மீது படும்படி பார்த்துக்கொண்டால் எப்படை வந்தாலும் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம் என்ற முப் படைகளை எதிரே நிறுத்திப் பாருங்கள். இவை தூள் கிளப்பும்!
Comments
Post a Comment