மனித இனத்திற்கு அழகைத் தரும் உறுப்பு மூக்கு.
மிருகங்களுக்கு முகத்துடன் மறைந்து சப்பையான மூக்கு அமைந்திருக்கிறது. மூக்கு என்று சொல்ல இரண்டு துவாரங்கள் மட்டும் காணப்படும்.
ஆனால் மனிதனுக்கு அப்படி அல்ல. முகத்தில் எடுப்பாக, அமைந்திருக்கிறது. அழகாக ஒரு பொருளை முகர்ந்து பார்த்து அதன் மணத்தை அறிந்துகொள்வதோடு மூக்கின் முக்கியத்துவம் முடிந்து விட்டதா? இல்லை. பிராணவாயுவை உள்ளே இழுத்துக் கரியமிலவாயுவை வெளியே தள்ளும் முக்கியமான கருவி மூக்கு.
இருதயம் நீடித்து உழைக்க மூச்சை இழுத்து, மூச்சை விட்டு அரும்பணி ஆற்றுகிறது மூக்கு. தூசு தும்புகள் பூச்சிகள் அசுத்தப் பொருட்கள் எதுவும் உடம்புக்கு உள்ளே காற்றுமூலம் நுழைந்துவிடாத படி தடுத்து நிறுத்துகிறது.
இந்த மூக்கில் சிலருக்குக் கோணல் இருப்பது தெரிவதில்லை.
கோணல் மூக்கு கோளாறை உண்டாக்குகிறது என்று காது மூக்குத் தொண்டை நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
மூக்கில் இரண்டு துவாரங்களுக்கு மத்தியில் ஒரு சுவர் இருக்கிறது. இது மூக்கின் உள்ளே இரண்டாகப் பிரிந்து சுவாசத்திற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இந்தச் சுவர்குருத்து எலும்பினால் ஆனது. இது சில காரணங்களால் ஒரு பக்கம் விலகி நிற்கிறது.
பிறவியிலேயே சிலருக்கு மூக்கின் நடுச் சுவர் விலகி இருக்கலாம். வளைந்திருக்கலாம்.
சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் ஏற்பட்டிருக் கலாம். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்திலேயே விபத்துக் காரணமாக விலகி இருக்கலாம். மூக்கின் நடு எலும்பு மென்மையானது. நீண்டு சுருங்கும் தன்மை உள்ளது. மூக்கில் அடிபடும் போது சற்று விலகி ஒரு பக்கம் வளைந்து விடுவது உண்டு.
இதனால் மூச்சு ஒரு வழியாக மட்டுமே உள்ளே செல்லும்; வெளியே வரும். இதனால் மூக்கின் ஒரு பக்கத்திற்குப் போதுமான காற்றுக் கிடைக்காததால் காய்ந்து விடும்.
இந்தச் சுவர் எலும்பு, நாசியை அழுத்தித்தலைவலியை உண்டாக்கும். சுவாசத்திற்குத் தடையையும் உண்டாக்கும். சளிப் பிடித்திருக்கும் சந்தர்ப்பத்தில் சுத்தக் காற்றைச் செல்லவிடாமல் தடை ஏற்படுத்துவதும் உண்டு. தொண்டை ஆழற்சி அடிக்கடி ஏற்படும். நமைச்சலும் வலியும் சில சமயங்களில் வீக்கமும் உண்டாகித் தொந்தரவு கொடுக்கும். நீண்ட காலமாக இந்த நிலை தொடர்ந்தால் தொண்டைபாதிக்கும். சுவாசம் விடைத் தடை ஏற்பட்டு அடிக்கடி சிரமத்தைச் கொடுக்கும்.
மூக்கு இருக்கும் வரை சளி உண்டு என்பதைப்போல் கோணல் மூக்கு இருக்கும்வரை மூச்சுக்குத் தடையும், புளூ ஜூரமும் (Nasal allergy) என்று சொல்லப்படும் மூக்கு நோய் ஒவ்வாமைத் தொந்தரவுகளும், தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.
கோணல் மூக்கை நிமிர்த்த முடியாதா? முடியும், மூக்கின் உள்ளே மிக நுட்பமான ஓர் ஆப்ரேஷனைச் செய்து நடுச் சுவரை ஒழுங்குபடுத்தி மூச்சு இழுக்கவும், மூச்சு விடவும் சௌகரியமான சூழ்நிலைகளைச் செய்கிறார்கள் ஈ.என்.டி.டாக்டர்கள்.
இந்த ஆபரேஷனை அனுபவமிக்க டாக்டர்களிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும்.
வெளிப் பார்வைக்கு மூக்கின் உள்ளே ஏற்பட்டிருக்கும் கோணல் தெரியாது.
இந்தக் கோளாறை டாக்டரிடம் காட்டி சோதித்த பிறகே கண்டுகொள்ள முடியும்.
ஆகவே, மூக்கில் எந்தக் கோளாறு ஏற்பட்டாலும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் காட்டிச் சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.
சிறு வயதில் ஏற்பட்ட கோளாறு வயதான பிறகும் தொடர்வதால் ஆரம்பத்திலேயே இந்தக் கோணலைச் சரி செய்து கொள்வது நல்லது.
ஆகவே மூக்கை கவனிக்க வேண்டியது முக்கியம்.
Comments
Post a Comment