நோய் வந்த பிறகு நோயின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுகிறோம். இதனால் நோய் தீர்ந்துவிடாது. மருந்து சாப்பிட்டால்தான் நோய் தீரும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அழுவதால் ஒருவகை ஆறுதல் கிடைக்கிறது.
கதறுவதும்; கண்ணீர் விட்டு அழுவதும், மன நோய்களைப் போக்கும் ஒரு மருந்து என்பது பலருக்குத் தெரியாது. அழவேண்டிய நேரத்தில் அழாமல், மனதிற்குள் போட்டு அமுக்கிவைப்பது நோய்களுக்குக் பல காரணமாகிறது என்று மன இயல் மருத்துவர்கள் ஒரு புதிய கருத்தை நமக்குச் சொல்லுகிறார்கள்.
அழுவது கோழைத்தனம்; அழுவது ஆண்மைக்கு இழுக்கு; அழுவது அகௌரவமானது; அழுவது சிறு பிள்ளைத்தனம் என்றெல்லாம் சில மேல்பூச்சுகளைப் பூசிக் கண்ணீரின் கதவுகளை சாத்திவிடுகிறார்கள். இதனால் உடலுக்கும் உள்ளத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை மறந்துவிடுகிறார்கள். மறைமுகமான சில நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவை உடனே வெளியே தெரிவதில்லை.
அன்புக்குரிய ஒருவர் இறந்து விட்டார் என்றதும் அதிச்சியும் உடனே அழுகையும் வரும். இதை அடக்க முடியாது. தடுக்கவும் முடியாது. ஆனால், வாய்விட்டு அழ வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் அழாமல் இருக்கலாமா? மௌனக் கண்ணீர் வடிக்கலாமா? கூடாது. கதறி அழ வேண்டும். அப்போதுதான் நெஞ்சின் சோகத்தினால் உண்டாகும் மனபாரம் உடைந்து நெஞ்சு நெகிழும். இல்லாவிட்டால் கவலையினால், அதிர்ச்சியினால், மாரடைப்பு போன்ற பல தொந்தரவுகள் உண்டாகலாம்.
எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள் தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது விம்மி விம்மி அழுதிருக்கிறார்கள். பேரறிஞர் தாமஸ் கால்லைல் தன் மனைவி இறந்த போது கதறி அழுதாராம். மனைவியின் நினைவு வரும்போதெல்லாம் விம்மி அழுவாராம்.
வின்ஸ்டன் சர்ச்சிலைக் கல்நெஞ்சக்காரர் என்று சொல்லுவார்கள். யுத்தத்தால் அழிந்த நகரத்தின் அழிவுகளை நேரில் பார்த்தபோது வாய்விட்டு அழுதாராம். அவர் பேரன் பிறந்த நேரத்தில் யுத்தத்தின் கோரச் சூழ்நிலையில் ஏன் பிறந்தாய்? என்று மனம் உருகி அழுதாராம்.
இதிலிருந்து என்ன தெரிகிறது? பெரிய மனிதர்களும் மனப் பக்குவம் பெற்றவர்களும் கூடச் சில நேரங்களில் அழுது ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.
சோகக் கண்ணீர் இறுக்கமான நம்புகளைத் தளர்த்து கிறது. விறைப்பான உணர்வு தோன்றாதவாறு தொய்வை உண்டாக்குகிறது. உடம்பில் பிராணவாயு பரவுகிறது. நுரையீரல் சம்பந்தமான நோய்களைப் போக்குகிறது. ஜீரண சக்தியைப் பெருக்குகிறது. நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது.
துன்பம் நரம்பு மண்டலத்திலும் இரத்த ஓட்ட மண்டலத்திலும் மிகுந்த இரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதனால் உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது. இரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகமாகி, இருதயத் துடிப்பைப் பெருக்கி இருதய நோய்க்கு நம்மை ஆளாக்குகிறது.
அழுவதால் இறுக்கம் குறைந்து கொலஸ்டிராலின் அளவும் குறைகிறதாம்.
கவலை உண்டானால் அதை மறக்க அதிகமாகச் சிகரெட்டை ஊதித் தள்ளுகிறார்கள்,அல்லது போதை மருந்துகளையும் மது வகைகளையும். தூக்க மாத்திரைகளையும் சிலர் சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். சிலர் மாது, சூது என்று தீயவழிகளில் காலத்தைப் போக்குகிறார்கள். இதனால் நேரத்தையும் பணத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.
வாய்விட்டு அழுதால் பல நோய்கள் நம் உடம்பை விட்டு, மனத்தை விட்டு ஓடிவிடுகின்றன. அழுவது நரம்புக்கு நல்லது. நரம்பு நோய்களிலிருந்து தப்பிக்கலாம். கண்ணிர்விட்டு அழுவதால் கண் தூய்மை பெறுகிறது. கண் பிரகாசம் அடைகிறது. இதயத்தின் இறுக்கம் குறைந்து அதனால் ஆறுதல் கிடைக்கிறது.
இருதய நோய், பிளட் பிரஷர், அல்சர் ஆகிய பல நோய்கள் மனக் கவலைகளால் அதிகமாகின்றன. இதற்கு வடிகால் அழுகை என்று சொன்னால் அதில் தவறில்லை.
Comments
Post a Comment