மனிதர்களை எளிதில் தாக்கும் ஒரு நோய் சளித் தொல்லை. இத்ற்குத் தப்பிய மனிதர்களே இல்லை. அளவோடு இருந்தால் அது நோயில்லை. மூக்கின் பாதுகாப்பிற்காக இந்தப் பசை எல்லோர் மூக்கிலும் அளவோடு இருக்கும்.
அது அதிகமாகும்போது நோயாகிறது. இந்த நோயைச் சாதரணமாகக் குறிப்பிடும்போது Cold என்று ஆங்கிலத்திலும், சளி, தடுமன், ஜலதோஷம் என்று தமிழிலும் குறிப்பிடுகிறார்கள். கோல்ட் என்று சொன்னாலே குளிர்ச்சியைக் குறிக்கிறது.
இந்த சளித்தொல்லை எப்போதெல்லாம் ஏற்படுகிறது?
மழையில் நனைந்தால், தண்ணீரில் குளித்தால் சிலருக்குத் தும்மல் வரும். பிறகு தொண்டைக் கரகரப்பு, இருமல், தலைவலி சிலருக்குக் காய்ச்சலும் உண்டாகும்.
இது அக்யூட் கோரிசா என்ற ஒருவகை விஷக்கிருமியின் வேலை, மூக்கையும் மூக்கைச் சுற்றியுள்ள காற்றுப் பைகளையும் இந்த விஷக் கிருமி தாக்குவதால் இது ஒரு நோயாக உருவெடுக்கிறது.
மூன்று காரணங்களால் நமக்குச் சளி பிடிக்கிறது.
ஒன்று, கிருமிகள் காரணமாக, இரண்டு ஒவ்வாமை என்று சொல்லப்படும் அலர்ஜி காரணமாக, மூன்றாவது மூக்கையும் மூக்கைச் சுற்றியுள்ள சைனஸ் என்ற அவடிகள் பாதிக்கப்படுவதன் காரணமாக.
சளி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் தும்மும் போது மூன்றடி தூரம் நீர்த்துளிகள் தெறிக்கின்றன. வெளிவரும் நீர்த் திவலைகளுடன் நோய் கிருமிகள் மூன்றடி தூரம் பரவுகின்றன. எதிரில் உள்ளவர்கள் தப்பிக்க முடியுமா? சளி நோய் ஒரு தொற்று நோய். இதனால் மற்றவர்களும் இந்த நோய்க்கு எளிதில் ஆளாகிறார்கள்.
ஆரோக்கியமான உடலமைப்புக் கொண்டவர்களை சளித் தொல்லை நெருங்குவதில்லை. நோய் எதிர்க்கும் சக்தி இழந்தவர்களையே இந்த நோய் இழுத்துப் போடுகிறது.
பெரியவர்களைவிடக் குழந்தைகளே அதிகமாகப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதற்கு நோய் தடுக்கும் ஆற்றல் குழந்தைகளிடம் குறைவாக இருப்பதுதான் காரணம். நுரையீரல் பலவீனமடைந்தவர்கள் சளித் தொல்லையால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள்.
குளிர் காலத்தில்தான் அதிகமாக என்ன தொந்தரவு ஏற்படுகிறதா?
ஆம். தோலுக்கும் சளி ஜவ்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆகவே தோல் நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். குளிர் காலத்தில் சளி அதிகமாகப் பரவுவதால் உடலை உடைகளால் எப்போதும் மூடிப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். சருமத்தை மசாஜ் செய்து கொண்டு இரத்த ஓட்டம் பரவலாக பாயும்படி செய்யவேண்டும்.
மூக்கின் வழியாக நன்றாக சுவாசிக்கப் பழகிக் கொள்ளவேண்டும். நல்ல காற்றைச் சுவாசிக்கவேண்டும்.
உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மாவுப் பண்டங்கள், மசாலா உணவுகள் எண்ணெயில் பொரிக்கப்பட்டவை, கொழுப்பு சர்க்கரைப் பண்டங்களை விலக்கி, சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு உடலை உறுதியாக வைத்துக் கொள்வது மிகமிக முக்கியம்.
பழம், கீரை, காய்கறிகளை உண்டு நோய் எதிர்க்கும் சக்தியை வளர்த்துக் கொள்ளவேண்டும். வைட்டமின் சி சத்துக் குறைவினால் சளித் தொல்லை உண்டாவதால் ஆரஞ்சுப்பழச் சாறு, ஆப்பிள், உலர்ந்த திராட்சை, பேரீட்சம் பழம், எலுமிச்சை, நெல்லிக்கனிகளை நன்கு சாப்பிட்டு வரவேண்டும்.
அலர்ஜியினால் சளித் தொல்லை அதிகமாகிறது. எனவே தூசி தும்புகள் பரவிக்கிடக்கும் இடங்களில் அதிக நேரம் இருக்காதீர்கள்.
சளித் தொல்லை ஒரு தனி நோய் அல்ல. பல நோய்களுக்கு வழி வகுக்கும் கூட்டு நோய். பல நோய்களின் பாதிப்புகளால் உருவாகும் அடையாளச் சின்னம். ஆகவே மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
சளித்தொல்லையிலிருந்து விடுபட என்னென்ன இயற்கையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்?
சாதாரணக் சளித் தொல்லைக்கு வைத்தியத்தில் பாராசிட்டமால், ஆஸ்பிரின், பென்சிலின் ஆங்கில ஆகிய மருந்துகள் உண்டு. சளித் தொல்லையிலிருந்து விடுபட ஆவி பிடிப்பது, வேது பிடிப்பது நல்லது. டிஞ்சர் பென்சாயின், மென்தால் எண்ணெய், யூகலிப்டஸ் எண்ணெய் இவற்றில் ஏதாவது ஒன்றை வெந்நீரில் கலந்து ஆவி பிடிக்கலாம். இதனால் தலைவலி, தலைபாரம், மூக்கடைப்பு ஆகியவை மறைந்துவிடும். சல்பா மருந்துகள், ஆன்டிபயாடிக் மருந்துகள் பெனடைல் மருந்துகள் தும்மலைத் தடுக்கும். சளித்தொல்லையை ஒழிக்கும்.
தமிழ் மருந்துகளில் சளியை வேரறுக்கும் மருந்துகள் ஏராளமாக இருக்கின்றன. துளசிச் சாறு ஓர் அவுன்ஸ் தினசரி குடித்துவந்தால் சளிச் சனியன் தலைகாட்டாது ஓடிவிடும். மூக்கில் நீர் வடிந்தால் ஜாதிக்காயை நீர் விட்டு உறைத்து அதன் குழம்பைச் சூடாக்கி மூக்கின்மேல் பற்றுப் போட்டால் நீர் கசிவது நின்றுவிடும்.
குழந்தைகளுக்குச் சளி பிடித்திருந்தால் துளசிச் சாறும், தூதுவளைச் சாறும் சம பங்கு கலந்து காலை மாலை ஒரு ஸ்பூன் கொடுத்தால் சளி கரைந்து விடும். குழந்தைக்கு நெஞ்சில் சளி இருந்தால் பூண்டைச் சுட்டு அதில் வரும் எண்ணெயை வடித்துத் தாய்ப் பாலில் கலந்து கொடுத்தால் சளி நீங்கும்.
பெரியவர்கள், தூதுவளை, ஆடாதொடைக் கீரைகளை சாப்பிட்டால் சளித்தொல்லை, உளி பாய்ந்த பாறைபோல் பொடிப் பொடியாகிவிடும்! ஆகவே சளிக்கு வழி விடாதீர்கள்!
Comments
Post a Comment